முதல்வர் ஜெயலலிதாவின் சாதனை திட்டங்களால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி ; சரத்குமார் பேச்சு

முதல்வர் ஜெயலலிதாவின் சாதனை திட்டங்களால் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி ; சரத்குமார் பேச்சு

சனி, நவம்பர் 12,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனை திட்டங்களால் அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்று தேர்தல் பிரசாரத்தில் சரத்குமார் கூறினார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாலகிருஷ்ணரெட்டி உள்பட 10–க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று அரவக்குறிச்சி தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு ஆதரவு திரட்டினார்.
 அதன்படி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈசநத்தம், க.பரமத்தி, தென்னிலை, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, தவுட்டுப்பாளையம், கரைப்பாளையம், நடையனூர், நொய்யல் குறுக்குச்சாலை, புன்னம் சத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் சரத்குமார் நேற்று காலை முதல் இரவு வரை தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது சரத்குமார் பேசியதாவது:–
கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியவர் முதலமைச்சர் ஜெயலலிதா. தற்போது நடக்க உள்ள தேர்தல் ஆட்சி மாற்றத்திற்காக அல்ல. ஆட்சியை வலுப்படுத்துவதற்காகத்தான். திறமையான வேட்பாளரை முதலமைச்சர் தேர்வு செய்துள்ளார். வேட்பாளர் செந்தில்பாலாஜி, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்த போது மக்கள் பணியை திறம்பட செய்துள்ளார்.
இதே தொகுதியில் இவரை எதிர்த்து நிற்கும் தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிசாமி சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஆனால் அவர் தொகுதி மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. சட்டசபையில் மக்கள் பிரச்சினைக்காக அவர் பேசியது இல்லை. மு.க.ஸ்டாலின் ஆட்சி மாற்றத்திற்காக இந்த தேர்தல் அல்ல என்று பேசிக்கொண்டு, பழனிசாமி தான் சிறந்த வேட்பாளர் என்று கூறுகிறார். ஆனால் அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தி.மு.க. வேட்பாளர் பழனிசாமியை மக்கள் தோற்கடிக்கப்போவது உறுதி.
நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த காவிரி நதிநீர் பிரச்சினையை முதலமைச்சர் ஜெயலலிதா தீர்த்து வைத்தார். அதுமட்டுமல்ல தமிழக மக்களுக்கு எத்தனையோ சாதனை திட்டங்களை முதல் –அமைச்சர் நிறைவேற்றி கொடுத்து இருக்கிறார். மக்களின் பிரார்த்தனையால் முதலமைச்சர் ஜெயலலிதா நல்ல உடல் நலம் பெற்று வருவார்.
அரவக்குறிச்சி தொகுதி வெற்றி விழாவில் வாக்காளர்களாகிய உங்களை சந்திப்பார். எனவே அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு அளித்து வேட்பாளர் செந்தில்பாலாஜியை வெற்றி பெறச்செய்ய வேண்டும். முதலமைச்சரின் சாதனை திட்டங்களால் செந்தில்பாலாஜி வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு சரத்குமார் பேசினார்.தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.