முதல்வர் ஜெயலலிதாவுக்கு “பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் : மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை

முதல்வர் ஜெயலலிதாவுக்கு “பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் : மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை

புதன், மார்ச் 09,2016,

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு “பாரத ரத்னா’ விருது வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் சசிகலா புஷ்பா செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தார்.
மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பெண் உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்பட்டனர். அப்போது அதிமுக உறுப்பினர் சசிகலா புஷ்பா பேசியதாவது:
“தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதில் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்ற அவர் நடவடிக்கை எடுத்தார். இதேபோன்று, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் 1992-ஆம் ஆண்டில் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. பெண் சிசுக் கொலையைத் தடுக்கும் வகையில் தொட்டில் குழந்தை திட்டம், பெண்கள் திருமணத்திற்கு 4 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் நிதியுதவி எனப் பெண்களின் நலனுக்கான பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இதனால், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது தமிழக முதல்வருக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மக்களவையில்…: மக்களவையில் மகளிர் தினத்தை ஒட்டி திருவண்ணாமலை தொகுதி உறுப்பினர் ஆர்.வனரோஜா பேசியதாவது: மகளிர் மேம்பாட்டில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் சிறப்பு அதிரடிப்படை போன்ற முனைப்பு நடவடிக்கைகளை ஜெயலலிதா எடுத்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 13 அம்சத் திட்டம், பெண் எழுத்தறிவுத் திட்டம், தொடர் கல்வித் திட்டம், பெண் எழுத்தாளர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், “அம்மா’ இலக்கிய விருது ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.
தென்காசி தொகுதி உறுப்பினர் எம்.வசந்தி பேசியதாவது: மகளிர் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதை தமிழக முதல்வர் உணர்ந்தவர். களிர் அதிகாரத்தை மேம்படுத்தும் வகையில் அனைத்து உள்ளாட்சிகளிலும் மகளிருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டார். ஆகவே, ஊரகப் பகுதி மகளிருக்கு உதவிடும் வகையில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.