முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ; அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ; அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி

செவ்வாய், அக்டோபர் 04,2016,

சென்னை : முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22–ந் தேதி இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவர் உடனடியாக சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவ்வப்போது மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 30–ந் தேதி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியில் நிபுணரான டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே வரவழைக்கப்பட்டார். அவரும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்ததுடன், சிகிச்சையில் சில மாற்றங்களையும் கூறினார்.

அவரது ஆலோசனையின் பேரில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நேற்று முன்தினம் முதல் முன்னேற்றம் ஏற்படத்தொடங்கியது. தொடர்ந்து அதே முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இதை அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து 12–வது நாளாக நேற்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நுழைவு வாயில் முன்பு அ.தி.மு.க. தொண்டர்கள் நிறைய பேர் கூடியிருந்தனர்.

முதலமைச்சர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை கேள்விப்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அவர் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப தொடர்ந்து பிரார்த்தனை செய்தபடி இருந்தனர். ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தலைமை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:–

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சரின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவருக்கு தேவையான நோய் எதிர்ப்பு மருந்துகள், சுவாச உதவி மற்றும் தொடர்புடைய அனைத்து மருத்துவ உதவிகளும் கிருமி தொற்று சிகிச்சைக்காக தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

முதலமைச்சருக்கு வழங்கப்படும் முழுமையான சிகிச்சைக்கு அவர் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார். டாக்டர்கள் குழுவினர் ஒன்று சேர்ந்து அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கண்காணித்து வருகின்றனர். சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் இன்னும் தங்கியிருக்க முதலமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்தப்பட்டுள்ளார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.