முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் : நாற்காலியில் உட்கார்ந்த படி இயல்பாக சுவாசித்தார்

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் :  நாற்காலியில் உட்கார்ந்த படி இயல்பாக சுவாசித்தார்

வெள்ளி, நவம்பர் 11,2016,

சென்னை ; முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், அவர் வெகுநேரம் நாற்காலியில் உட்கார்ந்து இயல்பாகவே சுவாசிக்கிறார் என்றும்,அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22–ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து அவர் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் உடல்நிலை முன்னேற்றம் அடைய வேண்டி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. தொண்டர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் 50–வது நாளாக நேற்று சிகிச்சை பெற்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதுமட்டுமில்லாமல், அவர் வெகுநேரம் நாற்காலியில் உட்கார்ந்ததாகவும், அந்த நேரத்தில் முதலமைச்சர் ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்படும் செயற்கை சுவாச குழாய் இல்லாமல் இயல்பாகவே சுவாசித்ததாகவும், டாக்டர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அவர் விருப்பப்பட்டு கேட்கும் உணவு வகைகள் வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வரப்பட்டு வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.