முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி,4238 பயனாளிகளுக்கு ரூ.17.98 கோடி திருமண நிதி மற்றும்16,952 கிராம் தங்கம்:அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ். கோகுல இந்திரா ஆகியோர் வழங்கினர்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி,4238 பயனாளிகளுக்கு ரூ.17.98 கோடி திருமண நிதி மற்றும்16,952 கிராம் தங்கம்:அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ். கோகுல இந்திரா ஆகியோர் வழங்கினர்

வியாழன் , ஜனவரி 07,2016,
சென்னையில் 2 நாட்களில் 4238 பயனாளிகளுக்கு ரூ.17 கோடியே 98 லட்சம் மதிப்பிலான திருமண நிதி உதவி மற்றும் 16 ஆயிரத்து 952 கிராம் தங்கம் ஆகியவற்றை அமைச்சர்கள் பா.வளர்மதி, எஸ். கோகுல இந்திரா ஆகியோர் வழங்கினார்கள்.
சென்னை மாநகராட்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் இரண்டாம் நாளாக மூன்று மண்டலங்களில் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் பா. வளர்மதி, கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பா. பென்ஜமின், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஜெயவர்த்தன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜலட்சுமி, மண்டலக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு 1,505 பயனாளிகளுக்கு ரூ.6.58 கோடி நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவற்றை வழங்கினார்கள்.
தேனாம்பேட்டை மண்டலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 702 பயனாளிகளுக்கு ரூ.3,03,25000 மதிப்பிலான நிதியுதவியையும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 497 பயனாளிகளுக்கு ரூ.2,18,50000 மதிப்பிலான நிதியுதவியையும், அடையாறு மண்டலத்தில் 306 பயனாளிகளுக்கு ரூ.1,36,25000 மதிப்பிலான நிதியுதவியையும் வழங்கினார்கள்.
நேற்று நான்கு மண்டலங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2733 பயனாளிகளுக்கு ரூ.11.30 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. இரண்டு நாட்களில் 7 மண்டலங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 4238 பயனாளிகளுக்கு ரூ.17.98 கோடி மதிப்பிலான நிதியுதவியையும், 16952 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சரின் தலைசிறந்த, உயர்ந்த, உன்னதமான திட்டம் ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு 4 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் திட்டமாகும். ஏழை பெண்களின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்றும், பெண்களின் கல்வி மற்றும் பொருளாதாரம் முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவே ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத இந்த திட்டம் தமிழ்நாட்டில்தான் தமிழ்நாடு முதலமைச்சரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு ஏழை, எளிய பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு 4 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. பெற்றோர்களின் கனவினை நனவாக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் இத்திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.
சென்னை மாநகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் 16,888 பயனாளிகளுக்கு ரூ.63.59 கோடி நிதியுதவியும், 67,552 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு பயன்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.