முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி,விலையில்லா கண் கண்ணாடி,விலையில்லா தலைக்கவசம்:அமைச்சர் வளர்மதி வழங்கினார்

முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி,விலையில்லா கண் கண்ணாடி,விலையில்லா தலைக்கவசம்:அமைச்சர் வளர்மதி வழங்கினார்

செவ்வாய், பெப்ரவரி 09,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, அ.இ.அ.தி.மு.க. சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, விலையில்லா தலைக்கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் நடைபெற்ற தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணியில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவின்படி, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விலையில்லா தலைக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் பாலம் அருகே ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில் சுமார் 100 பேருக்கு விலையில்லா தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன. மேலும், விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இதில், அமைச்சர் திருமதி பா. வளர்மதி, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஜெ. ஜெயவர்த்தனன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதனிடையே, சென்னை, ராயப்பேட்டை காவல்நிலையம் அருகே உள்ள அம்மையப்பன் தெருவில் உள்ள சுகாதார மையத்தில், அ.இ.அ.தி.மு.க. இலக்கிய அணி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், புரைநீக்கல், கண்ணீர் பை அடைப்பு, கண்ணில் சீழ் வடிதல், ஒற்றை தலைவலி உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளுக்கு சிகிச்சைகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மேலும், அறுவை சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு தங்குமிடம், உணவு, மருந்து மற்றும் விலையில்லா கண்ணாடி ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சியை அமைச்சர் திருமதி பா. வளர்மதி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பயனாளிகளுக்கு விலையில்லா மூக்கு கண்ணாடிகளை வழங்கினார்.