முதல்வர் ஜெயலலிதா எடுத்த முயற்சிகளால் தமிழகம் மின்மிகை மாநிலமாக உருவெடுத்துள்ளது ஆளுநர் ரோசய்யா பாராட்டு

முதல்வர் ஜெயலலிதா எடுத்த முயற்சிகளால் தமிழகம் மின்மிகை மாநிலமாக  உருவெடுத்துள்ளது ஆளுநர் ரோசய்யா பாராட்டு

வியாழன் , ஜனவரி 21,2016,

மின் பற்றாக்குறை என்ற நிலையிலிருந்து, மின்மிகை மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளதாக ஆளுநர் கே.ரோசய்யா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் உரையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அதிமுக ஆட்சி பொறுப்பேற்றபோது, மாநிலத்தில் கடும் மின் பற்றாக்குறை நிலவி வந்தது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த மின் உற்பத்தித் திட்டப் பணிகளை விரைவுபடுத்தி முடித்தும், நடுத்தர மற்றும் நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களை இறுதி செய்தும், முதல்வர் ஜெயலலிதா எடுத்த முயற்சிகளால் மாநிலத்தின் மின் உற்பத்தி உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம் தற்போது மின்மிகை மாநிலமாக உருவெடுத்துள்ளது.
மாநில மின்வழித் தொகுப்பில் 7,485 மெகாவாட் உற்பத்தித் திறனை இந்த அரசு கூடுதலாகச் சேர்த்திருப்பது மனநிறைவளிக்கிறது.
தொலைநோக்குப் பார்வைக்கு சான்று: அரசின் முன்னோடிக் கொள்கையான சூரியஒளி மின் உற்பத்திக் கொள்கை முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வைக்கு மேலும் ஒரு சான்றாகும்.
ரூ.35,356 கோடிக்கு முதலீடுகள்: 2012-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட புதிய சூரிய ஒளி மின் உற்பத்திக் கொள்கையின் பயனாக அண்மையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5,345 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரியஒளி மின் உற்பத்தித் திட்டங்களுக்கான ரூ.35,356 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த முன்னோடி முயற்சிகளால் சூரிய ஒளி மின் உற்பத்தியிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் உருவெடுத்திட முடியும். ஏற்கெனவே, நாட்டில் அதிக அளவிலான காற்றாலை மின் உற்பத்தித் திறனைப் பெற்றுள்ள மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.