முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டும் வேட்பாளர்கள்தான் வெற்றி பெறுவார்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டும் வேட்பாளர்கள்தான் வெற்றி பெறுவார்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

புதன், ஜனவரி 06,2016,

வரும் சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளிலும்முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டும் வேட்பாளர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்றார் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பேரணியைத் தொடக்கி வைத்து பேசியது: கடந்த சட்டமன்றத்தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று புதுக்கோட்டை அதிமுகவின் கோட்டை என நிரூபிக்கப்பட்டது. அதே போல 2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்து தமிழகத்தையே அதிமுகவின் கோட்டையாக மாற்றும் வகையில் தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும்.

கருணாநிதியின் சூழ்ச்சியை முறியடித்து வரும் தேர்தலில் வென்று அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என பொதுக்குழுவில் பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியதைச் செய்து முடிக்க வேண்டும். ஸ்டாலின் நடைபயணம், பாட்டாளி மக்கள்கட்சி, வைகோ போன்றவர்கள் நடைபயணம் சென்று மக்களிடம் மன்றாடி பாவ மன்னிப்புக் கேட்டு வருகின்றனர். ஆனால், சாதனைகளைக்கூறி நெஞ்சை நிமிர்த்தி மக்களைச் சந்திக்கும் ஒரே இயக்கம் அதிமுக மட்டும்தான். புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மா பேரவையைச் சேர்ந்த 2500 பேர் களப்பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல தமிழகம் முழுதும் அம்மா பேரவை சார்பில் வாக்குச்சேகரிக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர். எனவே, வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஜெயலலிதா விரல் நீட்டும் வேட்பாளர்கள் வெற்றி பெற்று அதிமுக கின்னஸ் சாதனையைப் படைக்கும் என்றார் விஜயபாஸ்கர்.புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அம்மா பேரவை மாவட்டச்செயலர் ஆர். நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.

இதைத்தொடந்த்து நடைபெற்ற பேரணி எம்ஜிஆர்- சிலை, அண்ணாசிலை, கிழக்கு ராஜவீதி, பிருந்தாவனம், பழனியப்பா சந்திப்பு, மேல ராஜவீதி வழியாக புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.இதில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஆர். கார்த்திக்தொண்டைமான், பி.கே. வைரமுத்து, மு. ராஜநாயகம், நகர்மன்றத்தலைவர் ரா. ராஜசேகரன், நகரச்செயலர் க. பாஸ்கர், விவசாயப்பிரிவு செயலர் என். மாசிலாமணி, வழக்குரைஞர் பிரிவு செயலர் அ. ரவிச்சந்திரன், மகளிரணிச்செயலர் ஆர். சுபத்திராதேவி உள்பட ஆயிக்கணக்கானோர் பங்கேற்றனர்.