முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்போம்: எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைப்போம்: எம்ஜிஆர் நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி

வெள்ளி, டிசம்பர் 25,

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 28-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அப்போது, ‘‘முதல்வர் ஜெய லலிதா தலைமையில் அவருக்கு எந்நாளும் விசுவாசத் தொண்டர் களாக இருப்போம், முதல்வர் ஜெயலலிதா அரசின் சாதனைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்வோம், பொய்ப் பிரச்சாரங்களால் அரசியல் மறுவாழ்வு பெற முயற்சிக்கும் எதிர்மறை அரசியல் சக்திகளின் சதியை முறியடிப்போம், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு அமைய பாடுபடுவோம்’’ என ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

உறுதிமொழி விவரம் வருமாறு:–

‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று தனது வாழ்வையே, தமிழக மக்களுக்காகவும், இந்தியத் திருநாட்டிற்காகவும் அர்ப்பணித்து, தமிழகத்தில், அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வண்ணம், பல்வேறு திட்டங்களைத் தீட்டி, முனைப்புடன் செயல்படுத்தி வரும், ஜெயலலிதாவின் தியாக வாழ்வின் சிறப்புகளை மக்களுக்கு தொடர்ந்து எடுத்துரைக்க, உளமாற உறுதி ஏற்கிறோம்.

காவேரி நதிநீர்ப் பங்கீடு; முல்லைப்பெரியாறு அணையில் தமிழர்களின் உரிமை; தமிழக மீனவர் நலன் காத்தல் உள்ளிட்ட தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதார விவகாரங்களில், உறுதியாய் கொள்கை முடிவுகளை எடுத்து, அவற்றில் வெற்றி வாகை சூடிய, நிரந்தரப்பொதுச்செயலாளர், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தமிழர் நலன் காக்கும் உரிமைப்போராட்டத்தின் வெற்றிகளை, மக்களுக்கு எடுத்துக் கூறிட, உளமாற உறுதி ஏற்கிறோம்.

தலைநகர் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெய்த கடும் மழையாலும், அதன் தொடர்ச்சியான வெள்ளப் பெருக்காலும் பாதிக்கப்பட்ட மக்களை, போர்க்கால அடிப்படையில் மீட்டெடுத்து, அனைவருக்கும் தாய் உள்ளத்தோடு ஏராளமான நிவாரண உதவிகளை வழங்கி வரும், முதல்–அமைச்சர் ஜெயலலிதா மக்கள் மீது கொண்டிருக்கும் பேரன்பை, அனைவருக்கும் எடுத்துரைக்க, உளமாற உறுதி ஏற்கிறோம்.

சாதனைகள்

விலையில்லா அரிசி; குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள்; மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மடிக் கணினி உள்ளிட்ட எண்ணற்ற கல்வி உபகரணங்கள்; ஏழைக் குடும்பங்களுக்கு விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள்; தாலிக்கு தங்கத்துடன் திருமண நிதியுதவி; விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி; ஏழை, எளியோருக்கு பசுமை வீடுகள் என்று, எல்லோரும் எல்லாமும் பெற்றிட, நல்லாட்சி நடத்தி வரும், ஜெயலலிதாவின் சாதனைகளால், தமிழகம் பெற்றிருக்கும் வளர்ச்சியைப் பற்றி, மக்களுக்கு நாள்தோறும் எடுத்துக் கூறிட, உளமாற உறுதி ஏற்கிறோம்.

தமிழகத்தில் இருள் பரப்பிய தீய சக்தியின் ஆட்சியை தூக்கி எறிந்து, மின்மிகையால் ஒளிரும் மாநிலமாக மாற்றியதோடு, சர்வதேச முதலீட்டாளர்கள் பலரும் தமிழ் நாட்டில் முதலீடு செய்து, தமிழகம் வளம் பெறுவதற்கு திட்டமிட்டு உழைத்து, தொழில் வளர்ச்சிக்கும், புதிய வேலை வாய்ப்புகளுக்கும் வழி அமைத்து, சரித்திரம் பேசும் சாதனைகளைப் படைத்திருக்கும், ஜெயலலிதாவின் சாதனைகளை தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க, உளமாற உறுதி ஏற்கிறோம்.

தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி

தமிழகத்தை அமைதிப்பூங்காவாகக் காக்கும் வகையிலும்; அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்கும் வளர்ச்சியை வழங்கும் வகையிலும்; பெண்கள், ஏழை, எளியோர் வளம் பெறும் வகையிலும்; கல்வி, வேலை வாய்ப்பில் தமிழக இளைஞர்கள், இளம் பெண்கள் முன்னிலை பெறும் வண்ணமும் நல்லாட்சி நடத்தும் ஆற்றல் பெற்றவர், நம் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மட்டுமே என்பதால், விரைவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில், அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நல்லாசியோடு, நிரந்தரப்பொதுச் செயலாளர், முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தொடர்ந்து நல்லாட்சி அமைந்திட, முழு அர்ப்பணிப்போடு களப்பணியாற்றுவோம் என்று இந்நாளில் உளமாற உறுதி ஏற்கிறோம்.

இவ்வாறு மொத்தம் 14 உறுதிமொழிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

மக்கள் கூட்டம்

எம்.ஜி.ஆர். சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்களும், எம்.ஜி.ஆர். விசுவாசிகளும் என பல்லாயிரக்கணக்கானவர்கள் குவிந்தனர். இதனால் மெரினா கடற்கரை மற்றும் காமராஜர் சாலை முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் தலையாகவே தென்பட்டது.

மக்கள் அலை அலையாக வந்து எம்.ஜி.ஆருக்கு மலரஞ்சலி செலுத்தினர். அவரது சமாதியில் பூக்களை தூவி தங்கள் அன்பை வெளிப்படுத்திய காட்சிகளை பார்க்க முடிந்தது.

புதுடெல்லி பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு, அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவுச்செயலாளர் அன்வர்ராஜா, அமைப்பு செயலாளர் செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.