முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் : விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தகவல்

முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் : விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தகவல்

செவ்வாய், அக்டோபர் 04,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைந்து வருவதாக அதிமுக தலைவர்கள் தன்னிடம் உறுதிபட தெரிவித்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று நேரில் சென்றார். அ.தி.மு.க மூத்த தலைவர்களுடன் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விரிவாக கேட்டறிந்தார். இதன் பின்னர் மருத்துவமனைக்கு வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் முதல்வர் கடந்த 1 வாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வந்திருக்கிறேன். முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் 2-வது தளத்திற்கு சென்றேன். அங்கு பொதுமக்கள் இயல்பாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த கெடுபிடியும் இல்லை. மருத்துவமனைக்கு சென்ற என்னை அமைச்சர்கள் வரவேற்றனர். முதல்வர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார் என்றும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் என்னிடம் உறுதிபட தெரிவித்தனர்.

கவர்னர் அண்மையில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அறிக்கை வழங்கியிருந்தார். அந்த அறிக்கையில் மனநிறைவடையாததால் இன்று நேரில் வந்தேன். முதல்வர் ஜெயலலிதா மிக நலமுடன் இருப்பதாகவும், இரண்டொரு நாட்களில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்று என்னிடம் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

முதல்வர் ஜெயலலிதா வெகுவிரைவில் குணமடைய வேண்டும். வழக்கம் போல அரசியல் பணிகளை ஆற்ற வேண்டும். தமிழகத்தின் ஓட்டுமொத்த முதல்வர் என்ற அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதாவின் நலம் விசாரிப்பதற்காக வந்திருக்கிறேன்.
இவ்வாறு திருமாவளவன் நிருபர்களிடம் தெரிவித்தார்.