முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கவர்னர் தேசியக்கொடி ஏற்றினார்

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கவர்னர் தேசியக்கொடி ஏற்றினார்

புதன், ஜனவரி 27,2016,

67வது குடியரசு தினவிழா மாணவ,மாணவியர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், அலங்கார அணிவகுப்புகளுடன் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் கவர்னர் ரோசய்யா தேசிய கொடி ஏற்றிவைத்தார். 67 வது குடியரசு தினவிழா சென்னை கடற்கரையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் ஜெயலலிதா காலை 7. 52 மணிக்கு வந்தார். அவர் கடற்கரையில் குழுமியிருந்த பார்வையாளர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து 7.54 மணிக்கு தமிழக கவர்னர் ரோசய்யா வருகை தந்து வாழ்த்துக்களை கூறினார். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலாளர் ஞானதேசிகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார், விழா மேடைக்கு வந்த கவர்னர் ரோசய்யாவை முதல்வர் ஜெயலலிதா வரவேற்றார்., இதன்பின்னர் முப்படை தளபதிகளையும் காவல்துறை டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளையும் கவர்னருக்கு முதல்வர் அறிமுகம் செய்துவைத்தார். இதைத்தொடர்ந்து நாட்டுப்பண் இசைக்க கவர்னர் ரோசய்யா தேசியக்கொடி ஏற்றினார், அப்போது இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரில் இருந்து மலர்மாரி பொழியப்பட்டது இதையடுத்து தமிழக கவர்னர் ரோசய்யாவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணி வகுப்பு மரியாதையை தொடர்ந்து வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

மழை வெள்ளத்தில் சிக்கிய 1500 பேரை காப்பாற்றிய சென்னை கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.எஸ்.பாஸ்கர், கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட தாயையும் மகனையும் காப்பாற்றிய நங்கநல்லூரை சேர்ந்த சீனிவாசன், சீர்காழியில் பெரும் அலையில் சிக்கிய மூன்று மாணவர்களை மீட்ட சிறுவன் ரிஷி , வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 600 பேரை காப்பாற்றிய முகமது யூனுஸ் ஆகியோருக்கு வீர தீர செயல்களுக்கான அண்ணா விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார், மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட கோட்டை அமீர் பெயரிலான விருதை, பட்டுக்கோட்டையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் மதபேதம் இன்றி ரம்ஜான் விருது படைக்கும் அதிராம்பட்டினத்தை சேர்ந்த அபுபக்கருக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்,. மேலும் தஞ்சை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி. ராஜேந்திரனுக்கும், நாகப்பட்டினம் மாவட்டம் புதுப்பட்டினம் காவல் நிலைய எஸ்.ஐ., ராமமூர்த்தி, தர்மபுரி ஏரியூர் தலைமைக்காவலர் ராஜூ, ஆகியோருக்கும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதற்கான உத்தமர் காந்தியடிகள் காவலர் பதக்கங்களையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

மேலும் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிகமாக அரைஏக்கருக்கு 3, 223 கிலோ தானிய மகசூல் செய்து சாதனை படைத்த மதுரை மாவட்டம் ,திருப்பாலையை சேர்ந்த பெண் விவசாயி பிரசன்னாவுக்கு முதலமைச்சர் சிறப்பு விருதை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இதைத்தொடர்ந்து பள்ளி- கல்லூரி மாணவ, மாணவியரின் கண்கவர் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதையடுத்து ராணுவ பலத்தை பறைசாற்றும் முப்படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை , பெண்கள் இடம் பெற்ற சிறப்பு காவல்படை , கமாண்டோ பிரிவு தேசிய மாணவர் படை ,நாட்டுநலப்பணித்திட்ட படை, சாரணர் படை ,ஆகியவற்றின் கம்பீர அணி வகுப்பு நடைபெற்றது. கடற்கரையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பை கவர்னர் ரோசய்யா பார்வையிட்டார். கலைநிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து தமிழக அரசின் சாதனையை விளக்கும் செய்திமக்கள் தொடர்புத்துறை, காவல்துறை, கூட்டுறவுத்துறை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் தேர்தல் துறை ஆகிய 14 துறைகளின் அலங்கார வாகன அணி வகுப்பு நடைபெற்றது.