முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார் நடிகை நமீதா

முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார் நடிகை நமீதா

ஞாயிறு, ஏப்ரல் 24,2016,

திருச்சியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அ.தி.மு.க.வில் இணைந்தார்.

திருச்சி பொன்மலை ஜி. கார்னர் ரெயில்வே மைதானத்தில் நேற்று அ.தி.மு.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா கலந்து கொண்டு திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த அ.தி.முக வேட்பாளர்கள் 67 பேரை அறிமுகப்படுத்தி பேசினார். மாலை 5.50 மணிக்கு தனது பேச்சை தொடங்கிய ஜெயலலிதா 6.50 மணிக்கு முடித்தார்.

ஜெயலலிதா பேசி முடித்ததும் பிற கட்சிகளை சேர்ந்தவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் அ.தி.மு.க.வில் சேருவார்கள், என அறிவிக்கப்பட்டது. அப்போது பிரபல நடிகை நமீதா ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அவருக்கு முதல் – அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். இதனை தொடர்ந்து நமீதா ஜெயலலிதாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

மேலும் தே.மு.தி.க. துறையூர் நகர தலைவர் துரைசாமி, ம.தி.மு.க. பகுதி செயலாளர் சுமங்கலி சம்பத், திருச்சி மாநகராட்சி 49-வது வார்டு கவுன்சிலர் இப்ராகிம் பிச்சை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அன்னவாசல் பேரூராட்சி 15-வது வார்டு உறுப்பினர் செல்வராஜ், மாநில மனித உரிமைகள் கழகம் தலைமை செயலாளர் த.செல்லதுரை, சோபனாபுரம் ஊராட்சி கிராம தலைவர் பாஸ்கர்ரெட்டி, சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் சிவன் சீனிவாஸ், திரைப்பட இயக்குனர் சக்திசிதம்பரம், திரைப்பட நடிகர் அனுமோகன், திரைப்பட நடிகரும், இயக்குனருமான ரெங்கநாதன் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தங்களை இணைத்துக்கொண்டனர்.