முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றி பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்படும்; மேயர் சைதை துரைசாமி பேச்சு

முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றி பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்படும்; மேயர் சைதை துரைசாமி பேச்சு

புதன், பெப்ரவரி 03,2016,

ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றி பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று மேயர் சைதை துரைசாமி பேசினார்.

மன்ற கூட்டம்

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் கட்டிடத்தில் உள்ள மன்ற கூடத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். துணை மேயர் பா.பெஞ்சமின், கமிஷனர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தை மேயர் சைதை துரைசாமி திருக்குறள் வாசித்து தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மேயர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:-

ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி, சென்னை மாநகராட்சி, பெருநகர சென்னையை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்குவதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, அவற்றிற்காக தக்க தீர்வுகளை கண்டறியும் பொருட்டு பல்வேறு திட்டங்களை தீட்டும் பணியில் முனைப்பாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டியை உருவாக்க நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் சென்னை மக்களின் கருத்தை முதன்மையாக கொண்டிருக்கும். அவர்கள் அளிக்கும் கருத்துகளுக்கு மதிப்பளித்து ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் வகுக்கப்படும்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு அங்கமாக, ஒருபகுதியை மேம்படுத்துவதற்கு பொதுமக்களின் கருத்து பெறப்பட்டு அவர்களின் கருத்துப்படி தியாகராயநகர் தேர்வாகியுள்ளது. இங்கு மேம்பட்ட உள்கட்டமைப்பு மேற்கொள்வதற்கு மின் வலையமைப்பை ஸ்மார்ட்டான தீர்வுகள் மூலம் மேம்படுத்துதல், கழிவு மேலாண்மை திட்டங்களான கழிவில் இருந்து எரிபொருள் மற்றும் மின்சாரம், உரம், கழிவு நீர் சுத்திகரிக்கப்படுதல் மற்றும் கட்டிட கழிவுகளை மறுசுழற்சி செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மற்றொரு அங்கமாக நகரம் முழுவதும் இத்திட்டத்தை நிறைவேற்ற பொதுமக்களின் கருத்து பெறப்பட்டு அவர்களின் கருத்துப்படி மோட்டார் வாகனமில்லா போக்குவரத்து சார்ந்த திட்டங்கள் மற்றும் குடிநீர் மேலாண்மை மற்றும் வெள்ளக் கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்பு மேற்கொள்வதற்கு திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி ஸ்மார்ட் சிட்டி திட்டம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.