முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

வியாழன் , அக்டோபர் 06,2016,

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி சென்னை அப்போலோ மருத்துவமனை முன்பு நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பர்தா அணிந்த இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்டோர், ஆலிம்களோடு சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளரும் முன்னாள் வக்ப் வாரியத்தலைவருமான தமிழ்மகன் உசேன் தலைமையில் இந்த பிரார்த்தனை நேற்று நடைபெற்றது.

இந்த பிரார்த்தனையின்போது தமிழ்மகன் உசேன் செய்தியாளர்களிடம் பேசுகையில்.,

அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இஸ்லாமிய சமூகத்திற்காக நல்ல பல திட்டங்களை அள்ளித் தந்தவர். தமிழ்நாட்டில் பயங்கரவாதம் தீவிரவாதம் ஆகியவற்றை ஒழித்து கட்டி அமைதி பூங்காவாக மாற்றி காட்டினார். இஸ்லாமிய மக்களின் நோன்பு கஞ்சிக்காக உலகிலேயே எங்கும் இல்லாத வகையில் 4500 மெட்ரிக் டன் அரிசி தந்து சமூக நல்லிணக்கம் காத்தவர். உலமாக்களின் ஓய்வூதியத்தை ஆயிரத்தில் இருந்து ஆயிரத்து ஐநாறாக்கியவர். பள்ளிவாசல்களை புனரமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கியும், ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை கடந்த 20 ஆண்டுகளாக சிறப்புடன் நடத்தி வரும் முதலமைச்சர் ஜெயலலிதா சிறிது உடல்நலம் குன்றி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று ஆட்சிப்பணியையும், கட்சிப்பணியையும் தொடர வேண்டும். அவர் நீடுழி வாழ வேண்டும் என்பதற்காக இந்தியா முழுவதும் தர்காக்களில் சிறப்பு துவா நடத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் இன்று (நேற்று) 1அப்போலோ மருத்துவமனையின் முன்பு சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டிருக்கிறோம் என்றார் தமிழ்மகன் உசேன்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க செய்தி தொடர்பாளர்கள் பாத்திமாபாபு, டாக்டர் சமரசம், அ.தி.மு.க எம்.எல்.ஏ குருநாதன், தென்சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர்கள் அஸ்பாக் ரகுமான், ராஜா, சேப்பாக்கம் பகுதி அ.தி.மு.க தலைவர் ஜெ.சீனிவாசன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி துணை செயலாளர் செய்யது அலி இப்ராகீம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.