முதல்வர் ஜெயலலிதா 59 நாட்களுக்கு பிறகு இட்லி சாப்பிட்டார் : அப்போலோ மருத்துவமனை மருத்துவர் தகவல்

முதல்வர் ஜெயலலிதா 59 நாட்களுக்கு பிறகு இட்லி சாப்பிட்டார் : அப்போலோ மருத்துவமனை மருத்துவர் தகவல்

திங்கட்கிழமை, நவம்பர் 21, 2016,

சென்னை அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் ஜெயலலிதா 59 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இட்லி சாப்பிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

டாக்டர்களின் தீவிர சிகிச்சை யால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த முதல்வர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.

தனி வார்டில் உள்ள முதல்வரைக் கண்காணித்து தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் அளித்து வருகின்றனர். பெண் பிசியோதெரபி நிபுணர் ஒருவரும் முதல்வருக்கு தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறார்.

முதல்வரின் உடல்நிலை பற்றி டாக்டர்களிடம் கேட்ட போது, “முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஓரளவு இயற்கையாக சுவாசிக்கத் தொடங்கியதால், அவருக்குப் பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவிகள் அகற்றப்பட்டன. ஆனால், அவரது தொண்டைப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த டிராகோடமி டியூப் மட்டும் அவசரத் தேவைக்காக அகற்றப்படவில்லை.

தற்போதும் தேவைப்படும்போது முதல்வருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வருக்கு திரவ உணவு மட்டுமே கொடுக்கப்பட்டது. உணவு முறையில் மாற்றம் செய்யப்பட்டு கொஞ்சம் திட உணவும் கொடுக்கப் பட்டு வந்தது.

முதல்வருக்கு சாப்பிட இட்லி கொடுக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முதல்வருக்கு சாப்பிட ஒரு இட்லி கொடுக்கப்பட்டது. அவரது தொண்டை பகுதியில் செயற்கை சுவாசத்திற்கான கருவி பொருத்தப்பட்டுள்ளதால், அவரால் அரை இட்லி மட்டுமே சாப்பிட முடிந்தது.

தினமும் இட்லி போன்ற திட உணவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக முதல்வருக்கு சாப்பிட கொடுக்க முடிவு செய்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.