முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது :சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி தொற்றுநோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது :சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

வெள்ளி, டிசம்பர் 11,2015,

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, சென்னையில் வெள்ளம் பாதித்த இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம்கள் மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தினமும் ஏராளமானோர் இந்த முகாம் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

சென்னையில் செயல்பட்டு வரும் இந்த மருத்துவ முகாம்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் பார்வையிட்டார். வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் பிளீச்சிங் பவுடர் மற்றும் விலையில்லா நாப்கின்கள் வழங்கும் பணிகளை ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து இந்த பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து தமிழக அரசு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மழை பெய்யும் காலகட்டங்களில் பொதுவாகவே தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்படும். இந்த நிலையில் தற்போது பெய்த மழையினால் தொற்றுநோய் பரவாமல் தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன?

பதில்:- ஏற்கனவே 2 முறை மிக அதிக மழை பெய்த போது, முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டன. அந்தவகையில் 216 நடமாடும் முகாம்களும் தொடங்கப்பட்டன. இப்போது பெய்யும் மழைக்கு இந்த முகாம்கள் 1,817 ஆக உயர்த்தப்பட்டு உள்ளன. தினந்தோறும் 3லட்சம் பொதுமக்கள் இந்த முகாம்கள் மூலம் பயனடைந்து செல்கின்றனர். காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கான தாக்கம் இருக்கிறதா? என்றும் பரிசோதிக்கப்படுகிறது. சுகாதாரத்துறையை பொருத்தமட்டில், 4 வாரத்திற்கும் மேலாக முன்னெச்சரிக்கை முகாம்கள் செயல்பட்டு பொதுமக்களுக்கு பயன்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப தொடர்ந்து இந்த முகாம்கள் செயல்படும்.

கேள்வி:- காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது?

பதில்:- முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் குப்பை கூளங்கள் மற்றும் கழிவுநீர் அகற்றப்பட்டு பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள எல்லா குடியிருப்புகளுக்கும் லு கிலோ பிளீச்சிங் பவுடர் பாக்கெட்டும், 20 குளோரின் மாத்திரைகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த பணி நேற்று தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

நோய் வராமல் தடுக்க நேற்று முதல் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பிளீச்சிங் பவுடர்-குளோரின் மாத்திரைகள் வழங்கும் பணி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் மூலம் நடந்து வருகிறது. மிக அதிகம் பாதித்த இடங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் வீடு வீடாக சென்று சுகாதார செய்திகளை பரப்பியும், நோய் பாதிப்பு உள்ளதா? என்றும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

நோய் வராமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் நீரை காய்ச்சி குடிக்கவேண்டும். காய்ச்சிய நீரையே சமையலுக்கும் பயன்படுத்தவேண்டும். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வாரியம் போன்றவற்றின் மூலம் குடிநீரில் குளோரின் அளவு 2 மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீர் மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க எல்லாவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

கேள்வி:-பொதுமக்களில் சிலர் எலிக்காய்ச்சல், வாந்தி-பேதி, காலரா உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடும் என்று அச்சத்தில் இருக்கிறார்கள். இதுதொடர்பாக சுகாதாரத்துறை என்ன விளக்கம் அளிக்க உள்ளது?

பதில்:- வெள்ளம் பாதித்த இடங்களில் இறந்து கிடந்த விலங்குகளின் உடல்கள் அகற்றி புதைக்கப்பட்டு, நோய் பரவாத வகையில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு விட்டது. சளி-காய்ச்சல் தவிர வேறு தொற்றுநோய்கள் எதுவும் தற்போது வரை யாருக்கும் இல்லை. எலிக்காய்ச்சலை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு விட்டது. மருத்துவர்களிடம் தேவையான அளவில் ‘டாக்ஸிசைக்கிளின்’ என்ற நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் இருப்பில் உள்ளன.

தமிழகத்தை பொருத்தவரை 3 மாதத்திற்கு தேவையான ரூ.90 கோடி மதிப்பிலான மருந்து-மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன. குறிப்பிட்ட மருத்துவ முகாமில் கூடுதலாக பயனாளிகள் வரும்போது திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டால், அருகில் உள்ள மருந்து கிடங்கு மற்றும் அரசு மருத்துவமனையில் இருந்து தேவையான மருந்து-மாத்திரைகள் பெற எல்லா ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது.

சேற்றுப்புண், தோல் நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கு தேவையான களிம்புகள் தேவையான அளவில் உள்ளது. இன்று (நேற்று) ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரம் பேருக்கு பிளீச்சிங் பவுடர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. அதேபோல 20 ஆயிரம் பெண்களுக்கு விலையில்லா ‘நாப்கின்’களும் வழங்கப்பட்டு உள்ளன.

எனவே தொற்றுநோய்கள் தொடர்பாக மக்கள் எவ்வித அச்சமும் கொள்ள தேவை இல்லை. நோய்கள் பரவாமல் தடுக்க எல்லாவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.