முதுகு தண்டில் காயம் அடைந்த சவுதி அரேபியாவில் பணியாற்றிய தமிழக பெண்ணுக்கு ரூ.10 லட்சம் உதவி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

முதுகு தண்டில் காயம் அடைந்த சவுதி அரேபியாவில் பணியாற்றிய தமிழக பெண்ணுக்கு ரூ.10 லட்சம் உதவி முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சனி, ஜூன் 18,2016,

சென்னை,
சவுதி அரேபியாவில் பணியாற்றிய இடத்தில் நடந்த கொடுமையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் முதுகு தண்டில் காயம் அடைந்த தமிழக பெண்ணுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை மாவட்டம், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தாட்சாயிணி, சவுதி அரேபியாவில் பணிக்கு சென்று, அங்கு பணிபுரிந்த இடத்தில் ஏற்பட்ட கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக, வீட்டு பால்கனியிலிருந்து குதித்ததில், முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் அடைந்து சவுதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் 16.6.2016 அன்று சென்னைக்கு அனுப்பப்பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ரூ.10 லட்சம்
தாட்சாயிணி முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் அடைந்ததை கேள்விப்பட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவரது குடும்ப சூழ்நிலை, உடல்நிலை மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சத்தை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த 10 லட்சம் ரூபாய், தாட்சாயிணி பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக வைக்கப்படும். இந்த வைப்பு நிதியில் இருந்து வட்டியாக மாதந்தோறும் 8 ஆயிரத்து 125 ரூபாய், தாட்சாயிணிக்கு கிடைக்கப்பெறும்
தாட்சாயிணிக்கு உயர்தர சிறப்பு சிகிச்சை அளிக்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபில் ஆகியோரை நேரில் சென்று தாட்சாயிணிக்கு தேவையான உதவிகளைச் செய்து ஆறுதல் கூற உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.