முத்துசாமி படைப்புகளுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ 5 லட்சம் பரிசு

முத்துசாமி படைப்புகளுக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ 5 லட்சம் பரிசு

நாமக்கல் மாவட்டம், ஆர். புதுப்பட்டி பேரூராட்சியைச் சேர்ந்த முதுபெரும் திரைப்படப் பாடலாசிரியரும், தமிழறிஞருமான முத்துசாமி படைத்துள்ள பல்வேறு நூல்களுக்குப் பரிசாக 5,00,000/- ரூபாயும், தொடரும் அவரது தமிழ்ப் பணியை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் 5,000/- ரூபாயும் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் பல்வேறு சாதனைகளையும், அரசியல் வெற்றிகளையும் போற்றி `புரட்சித் தலைவியின் புரட்சிக் காப்பியம்”, “புரட்சித் தலைவி அந்தாதி ஆயிரம்” ஆகிய நூல்களையும், கவிதைகளையும் படைத்துள்ளார். அதிமுக பொதுசெயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தமிழ் மொழியின் வளர்ச்சியிலும், தமிழுக்குத் தொண்டாற்றும் நல்லறிஞர்களை போற்றுவதிலும், அவர்களை பேணிக் காப்பதிலும் தனிப்பட்ட அக்கறையும், கவனமும் செலுத்தி ஆற்றி வரும் தமிழ்ப் பணியின் தொடர்ச்சியாக, முத்துசாமியின் புலமையைப் போற்றும் வகையில் அவர் இயற்றியுள்ள நூல்களுக்குப் பரிசாக 5,00,000/- ரூபாயும், 96 வயதிலும் தொடரும் அவரது மொழி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் 5,000/- ரூபாயும் “புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை”யில் இருந்து வழங்குமாறு ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது