முந்தைய தி.மு.க. அரசு, அரசியல் காரணங்களுக்காக பிறப்பித்த ஆணைகளின் விளைவாகவே நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது – தமிழக அரசு ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு

முந்தைய தி.மு.க. அரசு, அரசியல் காரணங்களுக்காக பிறப்பித்த ஆணைகளின் விளைவாகவே நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது – தமிழக அரசு ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு

புதன், டிசம்பர் 23,2015,

நீர்நிலைகளை பாதுகாக்காமல் முந்தைய தி.மு.க. அரசு, அரசியல் காரணங்களுக்காக பிறப்பித்த ஆணைகளின் விளைவாகத்தான், நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருநின்றவூர் ஏரியில் முந்தைய தி.மு.க. அரசு வீடுகளை கட்டிக்கொள்ள அனுமதி அளிக்கும் வகையில் அரசாணை வழங்கியதே அங்கு குடியிருப்புகள் பெருமழைக் காலங்களில் வெள்ளநீரில் மூழ்கக் காரணம் என்றும் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.

திருநின்றவூர் குடியிருப்புப் பகுதிகளில் மழை வெள்ள நீர் வெளியேற்றப்படாமல் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு பதிலளித்துள்ள பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. ஓ.பன்னீர் செல்வம், மக்கள் தங்களது சொந்த இடங்களை நில அபகறிப்பாளர்களிடம் பறிகொடுக்கும் நிலை தி.மு.க. ஆட்சியில் இருந்து வந்ததையும், மின் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளால் தமிழக மக்கள் தவித்து வந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், 2011-ம் ஆண்டு மே மாதம் முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்ற பின்னர் இவை அனைத்தும் சரி செய்யப்பட்டு, மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் திரு. பன்னீர் செல்வம், ஏரிபுறம்போக்கு, ஏரிக்கரைகள், நீர்ப் படுகைகள் என வீடுகள் கட்டுவதற்கு உகந்ததாக இல்லாத இடங்களிலும் அரசியல் காரணங்களுக்காக ஆக்கிரமிப்புகளை முறைப்படுத்துவது என்பது தி.மு.க. அரசு எப்பொழுதும் கொண்டுள்ள கொள்கை என குற்றம்சாட்டியுள்ளார்.

ஏரிகள் போன்ற ஆட்சேபகரமான ஆக்கிரமிப்புகளையும், முறைப்படுத்தும் வகையில், 1990-ம் ஆண்டு அன்றைய தி.முக. ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டதே திருநின்றவூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புப் பகுதிகளான பெரியார் நகர் பகுதி ஒன்று, பெரியார் நகர் பகுதி இரண்டு உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள் பெருமழை காலங்களில் வீடுகளைச் சுற்றி வெள்ளம் சூழ்கிறது என தெரிவித்துள்ள அமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம், அப்பகுதியில் தி.மு.க. ஆட்சிக் காலத்தின்போது செய்யப்பட்ட தவறுகளை, அந்தந்த காலங்களில் வெளியிடப்பட்ட அரசாணை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பகுதியில் 2,467 ஆக்கிரமிப்புகளில் ஆயிரத்து 6 பேருக்கு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அங்கு 2,467 வீடுகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

முந்தைய தி.மு.க ஆட்சியின் இதுபோன்ற தவறான நடவடிக்கையால், இந்த குடியிருப்புகள் ஏரியின் முழு கொள்ளளவு மட்டத்திற்கு, 5 அடி அளவிற்கு கீழே உள்ளது என்றும், மழைக் காலங்களில் ஏரி, 7 அடி அளவிற்கு நிரம்பும்போது, இக்குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து மக்கள் வீடுகளை விட்டு காலி செய்து, 6 மாதங்களுக்குப் பிறகே திரும்பி வரும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

திருநின்றவூர் ஏரியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், மழை நீரை முழுவதும் வெளியேற்ற இயலாது நிலைமையும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ஓ.பன்னீர் செல்வம், நீர்நிலைகளை பாதுகாக்காத முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு, அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற அரசாணைகளை பிறப்பித்ததன் விளைவாக, நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மக்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

எனினும், அப்பகுதியில் விவசாயிகள் குடியிருப்புதாரர்களிடம் கலந்து பேசி, பாதிப்பு இல்லாமலும், தேங்கியுள்ள மழைநீர் கணிசமாக குறையும் படியும், மதகுகள் வழியாக, தேவையான தண்ணீரை வெளியேற்ற அரசு முடிவெடுத்துள்ளதாகவும், இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் திரு. ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.