முன்பு பெற்றதை விட சிறப்பான வெற்றியை பெற ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிட அ.தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா

முன்பு பெற்றதை விட சிறப்பான வெற்றியை பெற ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிட அ.தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா

ஞாயிறு, ஜனவரி 17,2016,

சிறப்பான வெற்றியை பெற தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிட வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 99-வது பிறந்த தினத்தை ஒட்டி, கட்சியினருக்கு சனிக்கிழமை முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள மடலில் கூறியுள்ளதாவது:-

கலைத் துறையிலும், அரசியலிலும், பொதுத் தொண்டுகளிலும் ஈடுபடுத்திய எம்.ஜி.ஆரின் தடங்களை வாழ்க்கைக்கு வழிகாட்டும் பாதையாகக் கொண்டு மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். இரட்டை இலக்கத்தில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளைக் கொண்டாடும் இறுதி ஆண்டு இதுவாகும்.

அவரது பிறந்த நாள் இனி மூன்று இலக்க ஆண்டுகளாகக் கொண்டாடப்படும். அடுத்து வரும் பிறந்த நாள் நூற்றாண்டாக அமையப் போகிறது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டிலும் அதிமுக ஆட்சி: நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் ஆண்டிலும், அதிமுக ஆட்சி நடத்தும் இயக்கமாகத் திகழப் போகிறது. இந்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் இதற்கு முன்னர் அதிமுக பெற்றிருந்த வெற்றிகள் எல்லாவற்றையும்விட சிறப்பான வெற்றியைப் பெற்றிட வேண்டும்.

இந்திய வரலாற்றில் இப்படி ஒரு வெற்றியை வேறெந்த அரசியல் இயக்கமும் பெற்றதில்லை என்று உலகம் போற்றும் வகையில், அதிமுக வெற்றி பெறுவது எம்.ஜி.ஆரின் புகழுக்கு பொன்மகுடம் சேர்க்கும்.

அதிமுக அரசு, மக்களுக்கு ஆற்றி இருக்கும் தொண்டு அத்தகைய வெற்றியை உறுதி செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

வளர்ச்சிப் பாதையில்..: ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் உதவியும், சலுகையும் பல வகைகளில் கிடைத்திட திட்டங்கள் வகுக்கப்பட்டு எண்ணற்ற நன்மைகளைச் செய்து வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தை இட்டுச் செல்கிறது அதிமுக அரசு.

தேர்தல் பணியாற்றுங்கள்: சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு வெற்றிக் கனியை பரிசளிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். அந்தப் பரிசனைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் அதிமுகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டிய நேரமிது.

அரசின் பணிகளை வீடு வீடாக எடுத்துச் சொல்லி, ஒவ்வொருவரையும் சந்தித்து விளக்கிக் கூறி தேர்தல் பணியை ஆற்ற வேண்டும். ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன், ஒருங்கிணைந்து தேர்தல் தொடர்புடைய அனைத்துப் பணிகையும் இப்போதே தொடங்கிட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.