முப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றிடும் வகையில் தமிழக மக்கள்,கொடி நாளுக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும்:முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

முப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றிடும் வகையில் தமிழக மக்கள்,கொடி நாளுக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும்:முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

திங்கள் , டிசம்பர் 07,2015,

சென்னை: முப்படை வீரர்களின் தன்னலமற்ற தியாகத்தினை போற்றிடும் வகையிலும் கொடிநாள் (டிசம்பர் 7)நிதிக்கு தமிழக மக்கள் அனைவரும் தாராளமாகநிதி வழங்கிடவேண்டுமென முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட கொடி நாள் செய்தி: முப்படை வீரர்களின் அரும்பணியையும், தியாகத்தையும் போற்றி நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ஆம் தேதி படை வீரர் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது.
நமது எல்லைகளைப் பாதுகாப்பதோடு, இயற்கைச் சீற்றங்களின்போது மக்களைக் காத்திடும் சேவையை ஆற்றிவரும் நமது முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படை வீரர்களின் நலன்களையும் காப்பது நம் அனைவரின் கடமை ஆகும். இந்தச் சிறப்பான கடமையை நிறைவேற்றும் வகையில், கொடிகள் விற்பனை மூலமும், நன்கொடைகள் மூலமும் திரட்டப்படும் நிதி, படை வீரர்களுடைய குடும்பத்தினரின் நல்வாழ்வுக்கும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
வீர, தீரச் செயல்களைப் புரிந்ததற்காக விருது, பதக்கம் பெறும் தமிழகத்தைச் சேர்ந்த படை வீரர்களுக்கு உயர்த்தப்பட்ட பணப் பலன்கள், போர் கைம்பெண்கள், போரில் 50 சதவீதம், அதற்கு மேல் ஊனமுற்ற படை வீரர்களின் மகள்களுக்கு வழங்கப்படும் திருமண மானியத்தை ரூ. 50 ஆயிரமாக உயர்த்தியது, தமிழ்நாடு முன்னாள் படை வீரர்கள் நிறுவனத்தின் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டுக்காக எனது தலைமையிலான அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
முப்படை வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் நலனுக்கான கொடி நாள் நிதி திரட்டுவதிலும், அவர்களின் நலன் காத்திடுவதிலும் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. நமது தேசபக்தி வெளிப்படும் வகையிலும், முப்படை வீரர்களின் தன்னலமற்ற தியாகத்தைப் போற்றிடும் வகையிலும் கொடி நாள் நிதிக்கு தமிழக மக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார்.