மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சென்னை நீதிமன்றத்தில் வழக்கு

மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சென்னை நீதிமன்றத்தில் வழக்கு

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. இளைஞர் அணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக அரசு சார்பில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமைச்சர் திரு. R.B. உதயகுமார் சார்பில், மாநகர அரசு வழக்கறிஞர் திரு. எம்.எல். ஜெகன் தாக்கல் செய்துள்ள மனுவில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்திற்கு தமிழக அரசுதான் காரணம் என மத்திய ஆய்வுக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக, உண்மைக்கு மாறான பொய்த் தகவலைக் கூறிய மு.க.ஸ்டாலின் மீது, கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், பிப்ரவரி 4-ம் தேதியிட்ட நாளேடு ஒன்றில் வெளியான செய்தியில், பா.ம.க. இளைஞர் அணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸும், வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசுதான் காரணம் என மத்திய ஆய்வுக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறியிருந்தார். தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அவதூறாக பேசியுள்ள அவர் மீது, கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மற்றொரு மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விரு மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.