மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு அமோக வரவேற்பு; முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனதார பாராட்டு

மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு அமோக வரவேற்பு; முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனதார பாராட்டு

வெள்ளி, பெப்ரவரி 26,2016,

மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. திட்டத்தை அமல்படுத்திய முதல்வர் ஜெயலலிதாவுக்கு மூத்த குடிமக்கள் மனதார பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 18–ந்தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக பஸ்களில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். மாதம் 10 டோக்கன்கள் வழங்கப்படும். குளிர்சாதன பஸ்களை தவிர்த்து அனைத்து பஸ்களிலும் பயணம் செய்யலாம்.

இதைத்தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு இந்த திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக ஒரு சில மூத்த குடிமக்களுக்கு பஸ்சில் பயணம் செய்வதற்கான டோக்கன்களை ஜெயலலிதா வழங்கினார்.

இதையொட்டி சென்னை கோயம்பேடு, பெரம்பூர், பிராட்வே, அயனாவரம், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், அண்ணா சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பஸ் டெப்போக்களில் மூத்த குடிமக்களின் கூட்டம் அலைமோதியது.

தள்ளாடும் வயதிலும் பேரன், பேத்திகள், உறவினர்களை அழைத்துக்கொண்டு பஸ் டெப்போக்களுக்கு மூத்த குடிமக்கள் ஆர்வத்துடன் வந்தனர். நடப்பதற்கு துணை தேடும் சூழலிலும் கூட நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்து நின்று பஸ்களில் பயணம் செய்வதற்கான டோக்கன்களை வாங்கிச்சென்றனர்.

இலவச பஸ் பாஸ் டோக்கன் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை அல்லது பள்ளி சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வயதை உறுதி செய்யும் ஏதாவது ஒரு சான்றிதழின் நகல், பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படம் ஆகியவற்றை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை இணைத்து டெப்போக்களில் சமர்ப்பிக்கவேண்டும்.

இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு பிப்ரவரி (இம்மாதம்), மார்ச், ஏப்ரல், மே ஆகிய 4 மாதங்கள் சென்னை மாநகர அரசு பஸ்களில் பயணம் செய்வதற்கு ஒரு மாதத்துக்கு தலா 10 டோக்கன்கள் வீதம் 40 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்களை மட்டும் பயன்படுத்த முடியும்.

ஒரு டோக்கனில் ஒரு முறை பயணம் செய்யலாம். அந்தந்த மாதத்திற்குரிய டோக்கன்களை பயன்படுத்த தவறிவிட்டால், அடுத்த மாதங்களில் பயன்படுத்தமுடியாது. இதேபோல போக்குவரத்து துறையால் வழங்கப்பட்ட அடையாள அட்டையையும் ஒவ்வொரு முறை பயணம் செய்யும்போதும் கண்டக்டரிடம் காண்பிக்கவேண்டும்.

இதுகுறித்து இலவச பஸ் பாஸ் பெற்ற மூத்த குடிமக்கள் கூறும்போது, பெரும்பாலான மூத்த குடிமக்கள் வருமானம் இன்றி பிள்ளைகள், உறவினர்கள், அரசு சாரா அமைப்புகளை சார்ந்து இருக்கும் சூழலில் இந்த திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது. இதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனதார பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். 10 டோக்கன்கள் தருவதை மேலும் அதிகப்படுத்தினால் இன்னும் வசதியாக இருக்கும் என்றனர்.

பெரம்பூர் அரசு போக்குவரத்துக்கழக பஸ் டெப்போ மேலாளர் தண்டபாணி கூறுகையில், மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்துக்கு மூத்த குடிமக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் எங்கள் டெப்போவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இலவச பஸ் பாஸ் டோக்கன் பெற்றுள்ளனர் என்றார்.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டம் பஸ் நிலையங்கள், பணிமணைகள் என 42 இடங்களில் வழங்கப்படுகிறது. காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை நேரில் பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் 22 ஆயிரத்து 500 பேர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.