மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்

சனி, பெப்ரவரி 20,2016,

தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மூத்த  குடிமக்கள்  கட்டணமில்லாமல்  பயணம்  செய்யும் திட்டத்தை   துவக்கி   வைக்கும் அடையாளமாக 5 மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் டோக்கன்கள் மற்றும் பேருந்து பயண அட்டைகளை வழங்கி திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மூத்த குடிமக்களுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கப்படும்  என்ற தேர்தல் வாக்குறுதியை  நிறைவேற்றும்  வகையில்,  முதற்கட்டமாக சென்னை  மாநகரப்  பேருந்துகளில்  மூத்த  குடிமக்கள்  கட்டணமின்றி  பயணம்  செய்யும் வகையிலான   திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்கள்.

அதன்படி, சென்னை  மாநகர் போக்குவரத்துக்    கழகப் பேருந்துகளில்  மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல்  பயணம்  செய்யும் திட்டத்தை துவக்கி வைக்கும் அடையாளமாக 5 மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் டோக்கன்கள் மற்றும் பேருந்து பயண அட்டைகளை ஜெயலலிதா இன்று வழங்கி, திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.

இத்திட்டத்தின்படி,  60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் குளிர் சாதன வசதி இல்லாத  சென்னை  மாநகர் போக்குவரத்துக்  கழகத்தின்  அனைத்து  பேருந்துகளிலும் கட்டணமில்லாமல்  பயணம்  செய்யலாம்.    இதற்கென  மாதத்திற்கு  10  டோக்கன்கள் வழங்கப்படும்.  பேருந்து நடத்துநரிடம் இந்த டோக்கன்களை கொடுத்து கட்டணம் ஏதும் இல்லாமல் மூத்த குடிமக்கள் பயணம் செய்யலாம். இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விழைவோர், இதற்கான விண்ணப்பப் படிவத்தை சென்னை மாநகர்  போக்குவரத்துக்  கழக இணையதளத்திலிருந்து () பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது இந்த  விண்ணப்பங்களை சென்னை மாநகர் போக்குவரத்துக்  கழக இணைணயதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பஸ்  டெப்போக்களிலும்  பெற்றுக்  கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பத்தை எப்போது வேண்டுமானாலும் மூத்த குடிமக்கள்  அளிக்கலாம். விண்ணப்பங்கள் கொடுப்பதற்கென கடைசி தேதி என்று எதுவும்  நிர்ணயம் செய்யப்படவில்லை.

பூர்த்தி  செய்யப்பட்ட  விண்ணப்பங்களை  சம்பந்தப்பட்ட  பஸ் டெப்போக்களில்  கொடுத்து    அடையாள  அட்டை  மற்றும்  டோக்கன்களை  பெற்றுக் கொள்ளலாம்.    எந்தெந்த  பஸ்  டெப்போக்களில்  இந்த  வசதி  செய்யப்பட்டுள்ளது என்ற  விவரம் சென்னை  மாநகர் போக்குவரத்துக்     கழக  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.