மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் அ.தி.மு.க பொதுக் கூட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் அ.தி.மு.க பொதுக் கூட்டங்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , ஜனவரி 21,2016,

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் வரும் 25-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக மாணவர் அணி சார்பில் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஜனவரி 25-ஆம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் காணாத ஒரு மாபெரும் புரட்சியாகும். அந்தத் தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மொழிப் போர்த் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவது நமது விழுமிய கடமையாகும். அன்னைத் தமிழுக்காக ஆவி துறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 25-ம் தேதி அன்று அதிமுக மாணவர் அணியின் சார்பில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்படுகிறது. கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள். மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களுடனும், மாவட்டக் கழக நிர்வாகிகளுடனும், அறிவிக்கப்படும் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து மாணவர் அணி நிர்வாகிகளுடனும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.