மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது : பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது : பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

ஞாயிறு, பிப்ரவரி 26, 2017,

சென்னை ; காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு தொழில்நுட்ப அனுமதியை மத்திய அரசு வழங்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய  அந்தக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

கர்நாடக அரசானது ரூ.5 ஆயிரத்து 912 கோடி செலவில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த அணையில் 60 டி.எம்.சி. நீரை பெருக்கலாம். குடிநீர் மற்றும் மின்சார உற்பத்திக்காக இந்த அணை கட்டப்படுகிறது என்று கர்நாடகம் கூறுவதை நாங்கள், உங்களுடைய (பிரதமர்) மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மத்திய நீர்வள கமிஷன், சுப்ரீம்கோர்ட்டு மேற்பார்வை கமிட்டி, மத்திய நீர்வளத்துறை, மத்திய வனத்துறை, மத்திய மின்சார துறை,மத்திய சுற்றுப்புறசூழல் துறை  ஆகிய அமைச்சகங்களின் அனுமதியும் பெற கர்நாடக அரசு அணுகி இருப்பதோடு இதற்காக பெரும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இது வடிகால் பகுதியாக இருக்கும் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் மற்றும் கேரள ஆகிய மாநிலங்கள் சேர்ந்து சுப்ரீம்கோர்ட்டில் கடந்த 5-2-17-ம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளன. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள சில அம்சங்களை எதிர்த்து தமிழக அரசு சார்பாகவும் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை சுப்ரீம்கோர்ட்டு ஏற்றுக்கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை எதிர்த்தும் தமிழக அரசு சார்பாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கும் சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் இந்த விவகாரம் சுப்ரீம்கோர்ட்டுக்கு உட்பட்டதாகும். காவிரியின் குறுக்கே மேகதாது மற்றும் வேறு எந்த திட்டத்தை கர்நாடகம் செயல்படுத்தனால் அது குறித்து வடிகால் பகுதி மாநிலமாக இருக்கும் தமிழகத்துடன் கலந்தாலோசித்து பங்கிட்டு கொள்வதோடு அதன் முழு விபத்தையும் திட்டத்தையும் காவிரி வாரியத்திற்கும் பணியை தொடங்குவதற்கு முன்பு காவிரி நடுவர் மன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கும் தெரிவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய நீர்வளம் மற்றும் நிதி சீரமைப்பு, கங்கை சுத்திகரிப்புத்துறை அமைச்சகமானது கடந்த 8-1-16-ம் தேதி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது என்பதையும் தங்களுடைய (பிரதமர் ) மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

மேலும் மேகதாது உள்பட எந்த திட்டத்தையும்  தமிழக அரசுக்கும் சுப்ரீம்கோர்ட்டுக்கும் முன்கூட்டியே தெரிவிப்பதற்கு முன்பு செயல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை  கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை பெறாமல் மேகதாது அருகே தண்ணிரை பெருக்க கர்நாடக அரசு எடுத்துவரும் நடவடிக்கையானது ஏதேச்சதிகாரமும் தன்னிச்சையான நடவடிக்கையுமாகும். இந்த கர்நாடக அரசின் தன்னிச்சையான நடவடிக்கையானது தமிழகத்தை பெரிதும் பாதிக்கும். அதனால் தமிழத்தின் ஒப்புதல் பெறாமல் கர்நாடக அரசுக்கு காவிரியின் குறுக்கே  மேகதாது அணை திட்டத்தையோ அல்லது வேறு திட்டத்தையோ செயல்படுத்த மத்திய நீர்வளம், மத்திய வனம், சுற்றுப்புற சூழல் ஆகிய துறைகள் தொழில்நுட்ப அனுமதியை வழங்கக்கூடாது என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.