மேலும் 15 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்:வெள்ள மீட்பு-நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

மேலும் 15 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்:வெள்ள மீட்பு-நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

வெள்ளி, டிசம்பர் 04,2015,

வெள்ள மீட்பு-நிவாரணப் பணிகளில், தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த மேலும் 15 குழுக்கள் தமிழகம் வரவுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட தகவல்:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிவாரணம்-சீரமைப்புப் பணிகளைப் மேற்பார்வையிட்டு துரிதப்படுத்துவதற்காக அமைச்சர்கள்-ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சென்னை மாநகராட்சி ஆணையரோடு இணைந்து மீட்பு-நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, மண்டலத்துக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம், 15 மண்டலங்களுக்கும் அதிகாரிகள் அனுப்பப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீட்பு-நிவாரணப் பணிகளை கண்காணிக்க நியமனம் செய்யப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியுடன் இணைந்து 13 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் ஒரு மாவட்ட வருவாய் அதிகாரியும் பணியாற்றி வருகின்றனர்.
கனமழையின் காரணமாக வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கான நபர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொத்தம் 24 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் மீட்புப் பணியில் சென்னை-திருவள்ளூர் மாவட்டங்களில் படகுகளுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எனது வேண்டுகோளின்படி கூடுதலாக 15 குழுக்கள் விமானம் மூலம் வரவுள்ளன.
எனது வேண்டுகோளின்படி இந்திய ராணுவம் ஏற்கனவே 9 குழுக்களை மீட்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. மேலும், இந்திய கடற்படையின் 200 வீரர்களும்-கடலோர பாதுகாப்பு படையின் வீரர்களும் தங்களது படகுகள்-நீச்சல் வீரர்களுடன் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய விமானப் படை நான்கு ஹெலிகாப்டர்களுடன், இரண்டு கடலோரப் பாதுகாப்புப் படை ஹெலிகாப்டர்களும் தேடுதல் மற்றும் மீட்புப் பணியிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வான்வழியாக உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மாநில பேரிடர் மீட்பு குழுவின் 150 பயிற்சி பெற்ற வீரர்கள், கடலோரக் காவல் படையின் 3 குழுக்கள், 60 பயிற்சி பெற்ற வீரர்களுடன் தமிழ்நாடு காவல் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறையின் வீரர்கள் இரவு பகலாக வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் காவலர்களும், போக்குவரத்து காவலர்களும் வெள்ள பாதிப்பினால் மக்கள் வெளியேறிய பகுதிகளில் திருட்டுகள் நிகழாமல் தடுக்க ரோந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
“இந்திய விமானப் படையின் நான்கு ஹெலிகாப்டர்களுடன் இரண்டு கடலோரப் பாதுகாப்புப் படை ஹெலிகாப்டர்களும் தேடுதல் மற்றும் மீட்புப் பணியிலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வான்வழியாக உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.”என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.