மொழிப்போர் தியாகிகள்-தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

மொழிப்போர் தியாகிகள்-தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா

புதன், பெப்ரவரி 10,2016,

தியாகிகள்-தலைவர்களின் சிலைகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், சீனம், அரபு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட பாரதிதாசன் கவிதைகள், ஆத்திசூடி நூல்களை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.
மேலும், அரசுக் கட்டடங்கள் சிலவற்றையும் அவர் திறந்துவைத்தார் என்று தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், செய்தி-சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தலைமைச் செயலர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி, செய்தித் துறைச் செயலர் த.உதயசந்திரன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெ. குமரகுருபரன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கா.மு.சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திறந்துவைக்கப்பட்ட சிலைகள்
* கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி சிதம்பரநாதனின் சிலை.
*சுசீந்திரத்தில் நிறுவப்பட்டுள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சிலை.
*திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி கீழப்பளுவூர் சின்னச்சாமியின் சிலை.
*சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம்-தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை.
*ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்க சேதுபதியின் சிலை.
திறக்கப்பட்ட அரசுக் கட்டடங்கள்
*சென்னை தரமணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கல்வி, நிர்வாகம்-ஆய்வறிஞர் விடுதிக் கட்டடங்கள்.
*தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை. வளாகத்தில் நூலகக் கட்டடத்தை மையமாகக் கொண்டு “த’, “மி’, “ழ்’, “நா’, “டு’ என்ற வடிவில் 5 புலக் கட்டடங்கள் அமைப்பதற்கான திட்டத்தின் அடிப்படையில், “மி’ வடிவ அறிவியல் புலக் கட்டடம் திறப்பு
*மதுரை தல்லாகுளம் பகுதியில் உலக தமிழ்ச் சங்கக் கட்டுப்பாட்டில் சங்கத் தமிழரின் வாழ்வியலைக் கண்முன் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்.
*எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம்-தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் பொன்விழா முகப்பு வளைவு, மாணவர் விடுதிக் கட்டடம்.
*ராமேசுவரத்தில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில், மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு, நினைவிடத்தின் அருகில் கட்டப்பட்டுள்ள நவீன பயணியர் நிழற்குடை.ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்