மோசடி செயல்களில் ஈடுபடும் தி.மு.க. மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

மோசடி செயல்களில் ஈடுபடும் தி.மு.க. மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

ஞாயிறு, ஏப்ரல் 24,2016,

உரங்களின் விலை உயர்வுக்கு தி.மு.க.,வே காரணம், விவசாயிகள் தற்கொலை பற்றி ஊடகங்களில் தி.மு.க.,வினர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்று குற்றம்சாட்டிய முதல்வர் ஜெயலலிதா, மோசடி செயல்களில் ஈடுபடும் தி.மு.க.வை தேர்தல் ஆணையம் கண்கானித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி கூட்டத்தில் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் மே 16 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று ( சனிக் கிழமை), `திருச்சி மாவட்டம், பொன்மலை ரயில்வே ஜி கார்னர்’ என்ற இடத்தில் நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, கழக வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக, சென்னையில் இருந்து வான் வழியாகப் புறப்பட்டு திருச்சி சென்றடைந்தார். அங்கு திருச்சி மாநகர், திருச்சி புறநகர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா, பொதுக்கூட்ட மேடையை நோக்கிச் செல்லும் போது, சாலையின் இரு மருங்கிலும் வாழை மரங்கள், குருத்தோலைகள் அழகுற அமைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்து வாழ்த்து முழக்கமிட்டு வரவேற்றனர்.  தொடர்ந்து திருக்கோயில்களின் சார்பில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையையும், மகளிர் அளித்த பூரண கும்ப வரவேற்பையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்ட அவர், தம்மைக் காண்பதற்காக கடல் அலை போல் திரண்டிருந்த மக்களுக்கு, கழகத்தின் வெற்றிச் சின்னமாம் `இரட்டை இலை’ சின்னத்தைக் காண்பித்து, அனைவருக்கும் தமது நல்லாசிகளைத் தெரிவித்து, திருச்சிராப்பள்ளி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட 67 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது.,

விவசாய மேம்பாட்டுக்காக உங்கள் அன்புச் சகோதரியின் அரசு எடுத்த நடவடிக்கைகளைப் பற்றி இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தி அதன் மூலம் விவசாய உற்பத்தி அதிகரித்து, விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்துள்ளது. சாகுபடி பரப்பை அதிகரித்தல், விவசாயத்தில் புதிய உத்திகளை கையாளுதல், தரமான விதைகள் இதர இடுபொருட்கள் வழங்குதல் என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக, உணவு தானிய உற்பத்தியில் ஒவ்வொரு ஆண்டும் புதிய சாதனைகளை நாம் படைத்து வருகிறோம். உரங்கள் மற்றும் வேளாண் கருவிகளுக்கு மதிப்புக் கூட்டு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு வழி வகை செய்யும் வகையில், உரங்கள் வாங்கி விற்பனை செய்ய ஏதுவாக, TANFED நிறுவனத்திற்கு வட்டியில்லா முன்பணம் வழங்கப்பட்டுள்ளது.  குறைந்த அளவு தண்ணீரில் அதிக மகசூல் பெறும் அளவில் நுண்ணீர் பாசனத்திற்கு சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. 

பொதுப் பணித் துறையின் கீழ் உள்ள 5,695 ஏரிகளில் தூர் வாருதல், கரையைப் பலப்படுத்துதல், நீரியல் கட்டுமானங்களை சீரமைத்தல் போன்ற பணிகள் 2,870 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு அவை புனரமைக்கப்பட்டுள்ளன.  198 ஏரிகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 213 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 47 தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

66 உபவடி நிலங்களில் 4,778 ஏரிகளை சீரமைத்தல் மற்றும் ஆற்றுப் படுகைகளை மேம்படுத்தி  477 புதிய அணைக்கட்டுகள் மற்றும் தடுப்பணைகள்  கட்டுதல் போன்ற பணிகள் உலக வங்கி கடன் உதவியுடன் செயல்படுத்தப்படும்.  இதற்கென 2,950 கோடி ரூபாய் திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.  குறைந்த வட்டியில் விவசாயக் கடன் வழங்கப்படுகிறது. 

கடந்த 5 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 24,621 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், 2006 முதல் 2011 வரையிலான 5 ஆண்டுகளில் 9,164 கோடி ரூபாய் மட்டுமே கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் பயிர்க் கடனை குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி அறவே தள்ளுபடி செய்யப்படுகிறது. இதன்படி 829 கோடி ரூபாய் அளவிற்கு வட்டி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 

வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுடன்  இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பராமரித்து கையாள விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. “வேளாண் எந்திரங்கள் வாடகைக்கு வழங்கும் மற்றும் எந்திரங்கள் பழுது நீக்கும் சேவை மையங்கள்” அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய பல்வேறு நடவடிக்கைகளால் தான் கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அதாவது 2010-11-ம் ஆண்டில், உணவு தானிய உற்பத்தி 75.95 லட்சம்  மெட்ரிக் டன் தான் என்ற நிலையில், 2014-15-ம் ஆண்டில் இது 1 கோடியே 27 லட்சத்து 95 ஆயிரம் மெட்ரிக் டன் என அதிகரித்துள்ளது. எனவே தான், அதிக உணவு தானிய உற்பத்தி, அதிக பயறு வகை உற்பத்தி, அதிக சிறு தானிய உற்பத்தி என மூன்று முறை மத்திய அரசின் ‘கிருஷி கர்மான்’ விருதை நாம் பெற்றுள்ளோம்.

அறுவடைக் காலங்களில் வேளாண் விளைபொருட்களை வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் கிடங்குகளில் சேமித்து வைத்து, தானிய ஈட்டுக் கடன் பெற்று விலை ஏற்றத்தின் போது விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க முடியும். இதன் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3,492 புதிய கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. 

விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்  மற்றும் விவசாய தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில் “முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்” என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் குத்தகைதாரர்கள் விவசாய தொழிலாளர்கள் என அனைவருக்கும் இத்திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்த உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 37 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு 3,767 கோடி ரூபாய்  அளவிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

விவசாயிகள் தற்கொலை பற்றி தி.மு.க-வினர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  ஒரு விளம்பரத்தில் உர விலை உயர்வு பற்றியும், விவசாயிகள் தற்கொலை பற்றியும் தி.மு.க தெரிவித்துள்ளது.  உரங்களின் விலை உயர்வுக்கு யார் காரணம்? மக்கள் மறந்திருப்பார்கள் என்று தி.மு.க. தப்புக் கணக்கு போடுகிறது.  தி.மு.க அங்கம் வகித்த முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தானே உர விலைகளை உயர்த்தியது?  அதற்கு வழி வகுத்த அமைச்சரவை கூட்டத்தில் தி.மு.க.,வைச் சேர்ந்த அப்போதைய மத்திய அமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி பங்கேற்று ஒப்புதல் அளித்தாரா? இல்லையா? 

உரம் விலைகள் ஏற்றத்திற்கு காரணமாக இருந்து விட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு, உர விலையை ஏற்றியது போல விளம்பரம் செய்வது எவ்வளவு மோசடியான செயல்? கடந்த மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில், 2009-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1060.  2010-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 541.  கடந்த 2014-ம் ஆண்டு இது  68 என குறைந்துள்ளது. இந்த தற்கொலைகளும் பல்வேறு குடும்ப பிரச்சனைகளால் ஏற்பட்டதாகும். 

தி.மு.க.,வின் பொய்ப் பிரச்சாரத்தைப் பற்றி சில விவரங்களை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். தி.மு.க.,விற்கு இந்தத் தேர்தலில் தாங்கள் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறப் போவதில்லை என்பதும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் தான் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதும் நிச்சயமாகத் தெரிந்து விட்டது. இரண்டாம் இடத்திற்குக் கூட வர முடியாது என்ற பயம் அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது. எனவே தான், தங்கள் வசமுள்ள ஊடகங்கள் வாயிலாக பலவித பொய்ப் பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

தி.மு.க.,வினர் மேற்கொள்ளும் பலவகை பிரச்சாரங்களும் ஏற்பாடு செய்யப்பட்ட ஜோடித்த நாடகங்கள் தான். தங்களை உயர்த்திக் காட்டும் வகையில் இது போன்ற நாடகங்களை நடத்துவதோடு மட்டுமல்லாமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு எதிராக, ஒரு சில இடங்களில் மக்கள் உள்ளனர் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த இவர்கள் முனைந்துள்ளனர். 

தி.மு.க.,வைச் சேர்ந்த ஒரு சிலரை நிறுத்தி வைத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை கேள்விகள் கேட்பது போல் நாடகமாடி, அந்த பொய்ச் செய்திகளை அவர்களது குடும்பத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி வருகின்றனர். நாடகக் காட்சியைப் போல, பட்டுப் புடவை அணிந்து வயல்வெளியில் கூலி வேலை செய்யும் மகளிருடன் கருணாநிதியின் தனயன் உரையாடிய கூத்துக்களை எல்லாம் பார்த்த தமிழ் நாட்டு மக்களுக்கு, தி.மு.க.,வின் மோசடி பொய்ப் பிரச்சாரங்கள் பற்றி நன்றாகவே தெரியும். எனவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் வாக்கு சேகரிக்கும் இடங்களில், தி.மு.க.,வினர் நடத்தும் நாடகங்களால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.  இதிலும் ஏமாறப் போவது தி.மு.க தான்.  மக்கள் என் பக்கம் இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மோசடி செயல்களில் ஈடுபட்டு வரும் தி.மு.க.,வை, தேர்தல் ஆணையம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.