ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டங்கள்:முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டங்கள்:முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

புதன், மார்ச் 02,2016,

போக்குவரத்து, சுகாதாரம், குடிநீர்வாரியம் உள்ளிட்ட துறைகளில் நிறைவடைந்துள்ள ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்று சில திட்டங்களை தொடங்கிவைத்ததுடன் சில பயனாளிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளையும் நேரில் வழங்கினார்.
நகராட்சி நிர்வாகம்-குடிநீர் வழங்கல் துறை, குடிசை மாற்று வாரியம், அரசு போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.
மேலும் புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
நகராட்சி நிர்வாகம்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.735 கோடியே 73 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டிலான கட்டிடங்கள் மற்றும் திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்ததுடன், ரூ.420 கோடி மதிப்பிலான 20 ஆயிரம் சூரியஒளி மின்சக்தியுடன் கூடிய கான்கிரீட் வீடுகள் கட்ட பணி ஆணைகளையும் பயனாளிகளுக்கு அவர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் – திருவள்ளூர் நகராட்சியில் 54 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.
சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள உள்ளகரம் – புழுதிவாக்கம் பகுதிக்கு 24 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு முதற்கட்டமாக 3 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 195 தெருக்களை உள்ளடக்கிய 3 மண்டலங்களில் சுமார் 20,600 மக்கள் பயன்பெறும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் – ஆவடி பெருநகராட்சியில் 103 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு முதற்கட்டமாக நாகம்மை நகர், பணந்தோப்பு காலனி மற்றும் சிவன் கோவில் ஆகிய 3 பகுதிகளில் உள்ள 444 தெருக்களில் சுமார் 114 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது;
அங்கன்வாடி மையங்கள்
பெருநகர சென்னை மாநகராட்சி – திருவொற்றியூர் பகுதி, அன்னை சிவகாமி நகரில் வசிக்கும் 11 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் 9 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டம்; பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 4 கோடியே 73 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 19 அம்மா உணவகங்கள்; ஓட்டேரி கால்வாய் குறுக்கே 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எம்.எஸ்.நகர் – நரசிம்மா நகரை இணைக்கும் பாலம்; ஒரகடம், வெங்கடாபுரம், கொரட்டூர், அண்ணா தெரு, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், முகப்பேர் மேற்கு, முகப்பேர் கிழக்கு ஆகிய இடங்களில் 3 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள்; பள்ளிக்கரணையில் 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டுத்திடல்; கொட்டிவாக்கம் – குப்பம் சாலை மற்றும் திருவொற்றியூர் – வள்ளுவர் நகர் ஆகிய இடங்களில் 26 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்கள்; அண்ணா நகர் – டி.பி. சத்திரத்தில் 1 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடம்; என மொத்தம் 735 கோடியே 73 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
சூரியஒளி மின்சக்தி
மேலும், பேரூராட்சிகளில் 420 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சூரியஒளி மின் சக்தியுடன் கூடிய கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக குடிசை மற்றும் மண் வீடுகளில் வசிக்கும் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவியுடன் சூரியஒளி மின் சக்தியுடன் கூடிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு பணி ஆணைகளை வழங்குவதை தொடங்கி வைக்கும் அடையாளமாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.
அடுக்குமாடி குடியிருப்பு
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம், சென்னை – பார்த்தசாரதி நகர் திட்டப்பகுதியில் 128 அடுக்குமாடி குடியிருப்புகள்; சத்தியவாணிமுத்து நகர் திட்டப்பகுதியில் 392 அடுக்குமாடி குடியிருப்புகள்; நேரு பார்க் (பி.எச்.ரோடு) திட்டப்பகுதியில் 288 அடுக்குமாடி குடியிருப்புகள்; பிள்ளையார் கோவில் தெரு திட்டப்பகுதியில் 32 அடுக்குமாடி குடியிருப்புகள்; லாக் நகர் திட்டப்பகுதியில் 304 அடுக்குமாடி குடியிருப்புகள்; ஆண்டிமான்ய தோட்டம் திட்டப்பகுதியில் 48 அடுக்குமாடி குடியிருப்புகள்; கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் 136 அடுக்குமாடி குடியிருப்புகள்; காஞ்சீபுரம் மாவட்டம் – நாவலூர் திட்டப்பகுதியில் 2 ஆயிரத்து 48 அடுக்குமாடி குடியிருப்புகள்; என மொத்தம் 272 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 ஆயிரத்து 44 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா, திறந்து வைத்து, இக்குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
அதன் அடையாளமாக 6 குடும்பங்களுக்கும், மேலும் 5 திருநங்கைகளுக்கும் ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்
ரூ.10 கோடி செலவில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் அம்மா முழு உடல்பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம் ஆகிய திட்டங்களை ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
மாநிலத்திலுள்ள அனைத்து 385 வட்டார அளவிலான மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்டொன்றுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் வாரத்தில் இரு நாட்கள் பொதுமக்கள் சென்று, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த அழுத்தம், இ.சி.ஜி. கொலஸ்ட்ரால், கண் பரிசோதனை போன்ற அனைத்து அடிப்படை பரிசோதனைகளும் கட்டணமில்லாமல் செய்து கொள்ளும் வகையில் ‘அம்மா ஆரோக்கியத் திட்டம்’ ஆகியவற்றை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தொடங்கிவைத்தார்.
மருத்துவத்துறை கட்டிடங்கள்
மேலும் ரூ.35 கோடியே 17 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டிலான மருத்துவத்துறை கட்டிடங்கள். சென்னை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவ மருத்துவமனை வளாகத்தில் ரூ.18 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கூட கட்டிடம், சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனைக்கு சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ பிரிவிற்கான கட்டிடம். சென்னை அரசினர் சித்தமருத்துவக் கல்லூரிக்கு விலங்கியல்கூட கட்டிடம் மற்றும் குணப்பாட பிரிவிற்கான கட்டிடம், சென்னை அரசினர் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறைகளுக்கான கட்டிடம், சென்னை அரசினர் யுனானி மருத்துவக் கல்லூரிக்கு கூடுதல் துறை மற்றும் வகுப்பறைகளுக்கான கட்டிடம் மற்றும் சென்னை, அரசினர் சித்த மருத்துவக் கல்லூரிக்கான மூலிகைத் தோட்டம் என மொத்தம் ரூ.207 கோடியே 37 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவத் துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்துவைத்தார்.
மேலும் கரூர் மற்றும் புதுக்கோட்டையில் புதிதாக அமையவுள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ரூ.458 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கல்லூரி கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனை கட்டிடங்களுக்கு ஜெயலலிதா நேற்று அடிக்கல் நாட்டினார்.
ஒண்டிவீரனுக்கு முழு உருவச்சிலை
ரூ.29 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மதுரை உலகத் தமிழ் சங்க பெருந்திட்ட வளாகம், சென்னை தரமணியில் ரூ.3 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் மற்றும் பாளையங்கோட்டையில் ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபம் ஆகியவற்றை தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் நேற்று திறந்துவைத்தார்.
கண்காணிக்க நடமாடும் வாகனம்
சென்னை மாநகரின் சுற்றுப்புற காற்று மாசின் அளவினை தொடர்ந்து கண்காணிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாடுவாரியத்தின் சார்பில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவிலான நடமாடும் தொடர் சுற்றுப்புற காற்று மாசு கண்காணிக்கும் நிலைய வாகனத்தின் சேவையினை ஜெயலலிதா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
அன்னதான கூடங்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் – பூவிருந்தவல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோவில், திருவள்ளூர் மாவட்டம் – திருமழிசை ஜெகந்நாதப்பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் திருக்கோவில், சென்னை மாவட்டம்-வில்லிவாக்கம் சவுமியதாமோதரப் பெருமாள் திருக்கோவில், அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், பாடி திருவல்லீஸ்வரர் திருக்கோவில் உள்பட திருக்கோவில்களில் கட்டப்பட்டுள்ள 21 அன்னதானக் கூடங்கள்; என மொத்தம் 41 கோடியே 14 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இந்து சமய அறநிலையங்கள் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
சென்னை, அரசு கவின் கலைக்கல்லூரியில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைக்கூடம் மற்றும் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆவண காப்பகக் கூடம்; என மொத்தம் 4 கோடியே 64 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைக்கூடம், ஆவணக் காப்பகக் கூடம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பூங்கா ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.