ரூ.197.45 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீடுகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

ரூ.197.45 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீடுகள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

ஜூலை, 5 , 2017 ,புதன்கிழமை,

சென்னை : 197 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வீடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 15.7.2014 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்த அறிக்கையில், 1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தினால் நொச்சிக்குப்பம் பகுதியில் கட்டப்பட்ட 534 குடியிருப்புகள் மிகவும் சிதிலமடைந்து இருப்பதால், அவற்றை மீண்டும் கட்டித் தருமாறு அப்பகுதியில் வசிக்கும் குடும்பத்தினர் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் நொச்சிக்குப்பம் திட்டப் பகுதியில் 534 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று அறிவித்தார்.

ஜெயலலிதாவின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை, நொச்சிக்குப்பம் திட்டப் பகுதியில் 48 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 536 அடுக்குமாடிக் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகள் ஒவ்வொன்றும் 397 சதுர அடி கட்டட பரப்பளவுடன், பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறை, கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை, பி.எஸ். மூர்த்தி நகர் திட்டப் பகுதியில் 13 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 140 அடுக்குமாடிக் குடியிருப்புகள், சென்னை, நாகூரான் தோட்டம் திட்டப் பகுதியில் 2 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 32 அடுக்குமாடி குடியிருப்புகள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கடலூர் மாவட்டம், வெளிச்செம்மண்டலத்தில் சுயநிதி திட்டத்தின் கீழ் 6 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 39 வீடுகள், சென்னை, இந்திரா நகரில் சுயநிதி திட்டத்தின் கீழ் 111 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 204 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 13 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 74 அடுக்குமாடிக் குடியிருப்புகள், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி, மகாராஜசமுத்திரத்தில் 3 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 வீடுகள், என 133 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 397 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வீடுகள் என மொத்தம் 197 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வீடுகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.