ரூ.3¼ கோடியில் பணிகள் நடந்து வருகின்ற அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் முதல்வர் ஜெயலலிதா உறுதி

ரூ.3¼ கோடியில் பணிகள் நடந்து வருகின்ற அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் முதல்வர் ஜெயலலிதா உறுதி

திங்கள் , மே 02,2016,

ரூ.3 கோடியே 27 லட்சம் செலவில் பணிகள் நடந்து வருவதாகவும், அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியளித்தார்.

கோவையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:–

அத்திக்கடவு–அவினாசி திட்டம் பற்றி சில விவரங்களை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். பவானி ஆற்றின் உபரி நீரை பல நீர் ஆதாரங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் அத்திக்கடவு–அவினாசி கால்வாய் திட்டம் 1,862 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டு வெள்ள மேலாண்மை திட்டத்தின் கீழ், நிதி உதவி பெற தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு 2013–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது அரசால் அனுப்பப்பட்டது. மத்திய அரசு இதை நிராகரித்துவிட்டது. பாசனக் கட்டுமானங்களை நவீனப்படுத்துவதன் மூலம் சேகரிக்கப்படும் நீரை பயன்படுத்தி பாசனத் திட்டமாக மாற்றி அமைக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது.

பவானி வடிநிலத்தில் அமைந்துள்ள காளிங்கராயன் வாய்க்காலின் தலைப் பகுதிகள் 91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தடப்பள்ளி வாய்க்கால் மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்களின் தலைப் பகுதிகள் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. பவானி வடிநிலத்தில் உள்ள பிற பாசன கட்டுமானங்களை நவீனப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்திக்கடவு–அவினாசி திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகங்களின் ஒப்புதல் பெறுவதற்கும், நிலம் கையகப்படுத்தத் தேவையான ஆய்வுகள் மேற்கொண்டு ஆவணங்கள் தயாரிக்கவும் தேவையான பணிகளை மேற்கொள்ள ஒரு ஆலோசனை நிறுவனத்தை நியமித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள, 3 கோடியே 27 லட்சம் ரூபாய் கடந்த பிப்ரவரி மாதம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்திக்கடவு–அவினாசி திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை இந்த நேரத்தில் நான் உங்களுக்கு அளிக்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.