ரூ.59.47 கோடி மதிப்பீட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகம்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

ரூ.59.47 கோடி மதிப்பீட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகம்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

செவ்வாய்கிழமை, பிப்ரவரி 16, 2016,

சென்னை, பெருங்குடி – கொட்டிவாக்கம் கிராமத்தில் 59 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தினை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

சட்டக் கல்விக்கென தனியாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தை தெற்காசியாவிலேயே முதன் முதலாக  முதலமைச்சர் ஜெயலலிதா நிறுவினார். இப்பல்கலைக் கழகத்தின் கீழ் 7 அரசு சட்டக் கல்லூரிகளும், 1 தனியார் சுயநிதி சட்டக்கல்லூரியும் இயங்கி வருகின்றன. மேலும், சீர்மிகு சட்டப் பள்ளி மூலம் இளநிலை மற்றும் முதுநிலை சீர்மிகு வகுப்புகளை நடத்தி வருகிறது. தற்போது சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள பூம்பொழில் வளாகத்தில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் சீர்மிகு சட்டப்பள்ளி 4.82 ஏக்கர் பரப்பளவு கொண்டசிறிய இடத்தில் இயங்குகிறது. எனவே, இப்பல்கலைக்கழகம் மேலும் சிறப்புடன்இயங்கும் வகையில், இப்பல்கலைக் கழகத்திற்கென பெருங்குடியில் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள இடத்தில் நிர்வாக கட்டடம், நூலக கட்டடம், இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான வகுப்பறைகள் அடங்கிய கட்டடங்கள், மாணவ, மாணவியர் விடுதிகள், உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கங்களை உள்ளடக்கியரு முழுமையான பல்கலைக்கழக வளாகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, சென்னை, பெருங்குடி – கொட்டிவாக்கம் கிராமத்தில் 25 ஏக்கர் நிலத்தில், 2,69,205 சதுர அடி கட்டட பரப்பளவில், 59 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழக வளாகத்தினை காணொலிக் காட்சி மூலமாகத் முதல்வர் ஜெயலலிதா  திறந்து வைத்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து  வைத்த தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில், சீர்மிகு சட்டப்பள்ளி மாணவர்களுக்கு குளிரூட்டப்பட்ட நவீன வசதிகளைக் கொண்ட வகுப்பறைகளும்,கணினி மயமாக்கப்பட்ட நூலகமும், அயநூலகத்தில் ஒரே நேரத்தில் 180 மாணவர்கள் இணைய தளத்தை பயன்படுத்தக்கூடிய கணினி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நூலகத்தில் சுமார் 50,000 நூல்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு உள்ளன. மேலும் ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மின் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர பல்கலைக்கழக வளாகம் முழுவதிலும் இணையதள வசதியுடன்கூடிய கம்பியில்லா மண்டல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இளநிலை சீர்மிகு சட்டப்படிப்பு மாணவர்களுக்கென குளிரூட்டப்பட்ட 25 நவீன வகுப்பறைகளைக்கொண்ட கட்டடமும், முதுநிலை சீர்மிகு சட்டப்படிப்பு மாணவர்களுக்கென குளிரூட்டப்பட்ட 25 நவீன வகுப்பறைகளைக் கொண்ட கட்டடமும் கட்டப்பட்டுள்ளது.

அக்கட்டடங்கள் ஒவ்வொன்றிலும் 3 கருத்தரங்க கூடங்களும், மாதிரி நீதிமன்ற அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளாகத்தில் தலா 75 அறைகளுடன் கூடிய 2 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.  இந்த நிகழ்ச்சியில்,  நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர்  ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர்ஷீலா பாலகிருஷ்ணன் அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி, சட்டத் துறைச் செயலாளர் (பொறுப்பு)  சு.ச. பூவலிங்கம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் ப. வணங்காமுடி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.