ரூ.6 கோடியே 94 லட்சம் மதிப்பில் 4 புதிய பாலங்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

ரூ.6 கோடியே 94 லட்சம் மதிப்பில் 4 புதிய பாலங்கள் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

ஜூலை, 5 , 2017 ,புதன்கிழமை,

சென்னை : 6 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 பாலங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதார வசதிகள், சாலை வசதிகள், பாலங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், ஊரகப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துதல், பழுதடைந்த ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களுக்குப் புதிய கட்டிடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பாவக்கல் – அனுமந்தீர்த்தம் கிராமங்களை இணைக்கும் வகையில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், சிவகங்கை மாவட்டம், குருந்தம்பட்டு – ஊகம்பட்டு கிராமங்களை இணைக்கும் வகையில் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், காடுவெட்டி – சீலைபிள்ளையார்புதூர் கிராமங்களை இணைக்கும் வகையில் 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் இளங்காகுறிச்சி – தொப்பநாயக்கன்பட்டி கிராமங்களை இணைக்கும் வகையில் 1 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், என மொத்தம் 6 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 பாலங்களை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.