பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான மாணவர் விடுதிகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான மாணவர் விடுதிகளை முதல்வர் ஜெயலலிதா   திறந்து வைத்தார்

சனி, பெப்ரவரி 13,2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில், விழுப்புரத்தில் 1 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதியை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், 66 கோடியே 92 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான 67 விடுதிகளையும் திறந்து வைத்தார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியர் இடைநிற்றல் இன்றி கல்வி கற்றிடவும், அவர்தம் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும், நல்வாழ்விற்கும், புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டுதல், விடுதிக் கட்டடங்கள் கட்டுதல், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகையை உயர்த்தியது போன்ற பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், விழுப்புரத்தில் 1 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 9 ஆயிரத்து 853 சதுர அடி கட்டட பரப்பளவில், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதி கட்டடத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, வேலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 21 கோடியே 59 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான 25 விடுதிகள்;

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் ஆகிய இடங்களில் 1 கோடியே 94 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர்களுக்கான 2 விடுதிகள்;

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆகிய இடங்களில் 2 கோடியே 64 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர்களுக்கான 3 விடுதிகள்;

விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தேனி, கரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 10 கோடியே 11 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான 12 விடுதிகள்;

திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 26 கோடியே 92 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 20 விடுதிகள் ;

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சீர்மரபினர் பள்ளி மாணவர் விடுதி; வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் ஆகிய இடங்களில் சிறுபான்மையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர் விடுதிகள்;

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி கள்ளர் சீரமைப்பு பள்ளி மாணவர் விடுதி, என 3 கோடியே 68 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 விடுதிகள் என மொத்தம், 68 கோடியே 37 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், கள்ளர் சீரமைப்பு மற்றும் சிறுபான்மையினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 68 விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இந்த விடுதிகளில், கிரானைட் சமையல் மேடை, குடிநீர் சுத்திகரிக்கும் கருவி, சூரிய ஒளி மூலம் நீரை சூடுபடுத்தும் கருவி, மின்சார புகைபோக்கி, தரைதள தண்ணீர் சேமிப்பு தொட்டி, குளிர்சாதனப் பெட்டி, விடுதியில் உள்ள விளக்குகள் மற்றும் மின் விசிறிகளுக்கு தேவையான மின்சாரம் உற்பத்தி செய்திட 1 KWP திறன் கொண்ட சூரிய ஒளி போட்டோ வோல்டிக் பவர் பிளான்ட், மேம்படுத்தப்பட்ட சமையல் கூடம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கென பிரத்யேகமான கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு.எஸ். அப்துல் ரஹீம், தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் திரு.த.உதயச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் திரு. மா.சந்திரசேகரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.