ரே‌ஷனில் மக்கள் விரும்பாத பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் காமராஜ்

ரே‌ஷனில் மக்கள் விரும்பாத பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் காமராஜ்

ஜூலை 6 ,2017 ,வியாழக்கிழமை ,

சென்னை : ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது மக்கள் விரும்பாத சில பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்கும்படி ஊழியர்கள் கூறினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

சட்டசபையில் நியாய விலை கடைகள் மூலமாக வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை முழுமையாக வினியோகம் செய்ய வேண்டும் என்ற கவன ஈர்ப்பு தீர்மானம் தி.மு.க. சார்பில் கொண்டுவரப்பட்டது. அப்போது உறுப்பினர் செங்குட்டுவன் (தி.மு.க.) கூறும்போது, ‘கடந்த சில மாதங்களாக ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் முழுமையாக வழங்கப்படுவதில்லை. பொது மக்கள் விரும்பாத பொருட்களை வாங்கும்படி ரே‌ஷன் கடை ஊழியர்கள் வற்புறுத்துகிறார்கள். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். 
தடை இல்லை

இதற்கு பதில் அளித்து அமைச்சர் காமராஜ் கூறும்போது, ‘ரே‌ஷன் கடையில் 20 கிலோ இலவச அரிசி தொடர்ந்து வழங்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, பாமாயில் ஆகியவை தடையின்றி வழங்கப்பட்டது. 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை தடையின்றி வழங்க நீடிக்கப்பட்டு உள்ளது. தற்போது அரிசி, துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை ஆகியவை மானிய விலையில் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதில் எந்தவித தடையும் இல்லை.மண்எண்ணை தேவையானவர்களுக்கு வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் 10 கிலோ கோதுமையும், மற்ற இடங்களில் 5 கிலோ கோதுமையும் வழங்கப்படுகிறது. எனவே ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வினியோகத்தில் எந்த தடங்கலும் இல்லை. ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது மக்கள் விரும்பாத சில பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்கும்படி ஊழியர்கள் கூறினால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.