வசந்தம் தொடர்ந்திட அ.தி.மு.க.வை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வசந்தம் தொடர்ந்திட அ.தி.மு.க.வை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும் : முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்
வியாழன் , மே 12,2016,
தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டை யாரும் மறக்க முடியாது. வசந்தம் தொடர்ந்திட, தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்திட அ.தி.மு.க.வை மகத்தான வெற்றி பெற செய்யுங்கள் என்று சென்னையில் வேன் மூலம் வீதி, வீதியாக நேற்று பிரசாரம் செய்து முதலமைச்சர் ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.
தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சென்னையில் நேற்று வேன் மூலம் வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஏ.நூர்ஜஹான்(சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி), பரிதி இளம்வழுதி(எழும்பூர் (தனி)), கே.எஸ்.சீனிவாசன்(துறைமுகம்), டி.ஜெயக்குமார்(ராயபுரம்), பி.வெற்றிவேல்(பெரம்பூர்), வ.நீலகண்டன்(திரு.வி.க.நகர்(தனி), ஜே.சி.டி.பிரபாகர்(கொளத்தூர்), தாடி ம.ராசு(வில்லிவாக்கம்), விருகை வி.என்.ரவி(விருகம்பாக்கம்), எஸ்.கோகுலஇந்திரா(அண்ணாநகர்), பா.வளர்மதி(ஆயிரம் விளக்கு), சத்திய நாராயணன்( தியாகராயநகர்), சி.பொன்னையன்(சைதாப்பேட்டை), எம்.சி.முனுசாமி(வேளச்சேரி), ஆர்.நட்ராஜ்(மயிலாப்பூர்) மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்துக்குட்பட்ட ஆலந்தூர் தொகுதி வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட ஐஸ்அவுஸ் காவல் நிலையம் சந்திப்பிலும், எழும்பூர் தொகுதிக்குட்பட்ட சூளை தபால் நிலையம், ராயபுரம் தொகுதிக்குப்பட்ட மூலக்கொத்தளம் சந்திப்பு, பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர், திரு.வி.க.நகர்(தனி) தொகுதிக்குட்பட்ட ஓட்டேரி பாலம், கொளத்தூர் தொகுதிக்குப்பட்ட அயனாவரம் பேருந்து நிலையம், வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட ரெட்டி தெரு சந்திப்பு, விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கோயம்பேடு பஸ் நிலையம், அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட எம்.எம்.டி.ஏ.காலனி, ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட புஷ்பா நகர், தியாகராயநகர் தொகுதிக்குட்பட்ட தியாகராயநகர் பஸ் நிலையம், சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட பனகல் மாளிகை, ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட அண்ணா சிலை, மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட மயிலை மாங்கொல்லை ஆகிய இடங்களில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேனில் அமர்ந்தபடி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ‘இரட்டை இலை’ சின்னத்தில் ஆதரவு திரட்டி பேசினார்.
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-
அன்பார்ந்த வாக்காளர்களே, என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே, இதய தெய்வம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான எனது அருமை உடன்பிறப்புகளே, எனது அருமை வாக்காளர் பெருமக்களே முதற்கண் என் அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகளாக எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு உங்கள் வாழ்வில் வசந்தத்தை கொடுத்துள்ளது. அந்த வசந்தம் தொடர்ந்திட, சட்டம்-ஒழுங்கு சீராக பாதுகாக்கப்பட்டு, தமிழகம் அமைதி பூங்காவாக தொடர்ந்து நிகழ்ந்திட, மின்வெட்டே இல்லை என்ற நிலை நிலைத்திட, ஏழை-எளியோர் தொடர்ந்து ஏற்றம் பெற்றிட, நாடு செழித்திட, வளம் பெற்றிட வருகிற 16-ந்தேதி சட்டமன்ற தேர்தலில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தந்த வெற்றி சின்னமாம் ‘ இரட்டை சிலை’ சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 
தி.மு.க. மீது குற்றச்சாட்டு
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட அயனாவரம் பஸ் நிலையம் அருகே முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டை யாரும் மறக்க முடியாது. அதனால் மக்கள் பட்ட கஷ்டங்களையும் மறக்கவே முடியாது. 10 மணி நேரம் 15 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. மாணக்கர்கள் படிக்க முடியவில்லை. தமிழகமே இருளில் மூழ்கி இருந்தது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து இருந்தது. நில அபகரிப்பாளர்களால் உங்கள் சொத்துகளும், நிலங்களும் அபகரிக்கப்பட்டன. ஆனால், கடந்த 5 ஆண்டு காலமாக எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு உங்கள் வாழ்வில் வசந்தத்தை கொடுத்துள்ளது. இப்போது தமிழகம் ஒளிமயமாக்கப்பட்டு உள்ளது. மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டம்-ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
நில அபகரிப்பாளர்கள் மீது காவல்துறையினரால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலங்களும், சொத்துக்களும் உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டு விட்டன. 
இவ்வாறு அவர் பேசினார்.
 
வீதி, வீதியாக பிரசாரம்
சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து மதியம் 3 மணியளவில் புறப்பட்டு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3.15 மணியளவில் பிரசாரத்தை தொடங்கிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா 3 மணி நேரம் 15 நிமிடங்கள் வீதி, வீதியாக சென்று, மாலை 6.30 மணியளவில் மயிலாப்பூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்துவிட்டு, போயஸ்கார்டன் திரும்பினார்.