வாரிசுகளைக் கொண்டாடாத கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும்: அதிமுகவில் இணைந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்

வாரிசுகளைக் கொண்டாடாத கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும்: அதிமுகவில் இணைந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்

ஞாயிறு, ஏப்ரல் 24,2016,

வாரிசுகளை கொண்டாடாத கட்சியே ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவில் இணைந்த தமாகா மூத்தத் துணைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறினார்.
 சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வரும், கட்சியின் பொதுச் செயலருமான ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சனிக்கிழமை எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் சந்தித்து, அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
 அப்போது அவருடன் மாவட்டத் தலைவர்கள் வழக்குரைஞர் கே.மனோகரன் (கோவை மாநகர்), ஜி.ஆர்.கதிரவன் (மத்திய சென்னை) ஆகியோரும் அதிமுகவில் இணைந்தனர்.
 திமுக முன்னாள் அமைச்சரும் இணைந்தார்: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் உள்ளிட்டோரும் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். இதேபோல், மதுரை ஆதினமும் முதல்வரைச் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
 இந்த நிலையில், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் அளித்த சிறப்புப் பேட்டி:-
 கேள்வி: அதிமுகவில் இணைய காரணம் என்ன?
 பதில்: தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற மனநிலையே தமாகாவினரிடம் இருந்தது. இதை ஜி.கே.வாசன் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின்போதும், வேட்பாளர் நேர்காணலின்போது பங்கேற்ற 80 சதவீதம் பேர் வலியுறுத்தினர். அதிமுகவுடன் கூட்டணி குறித்து வாசனே பேசி வந்தார். சில காரணங்களால் கூட்டணி சரியாக வராது எனத் தெரிவித்தார்.
 தொடர்ந்து பேசினால் சரியாக வரும் என்றோம். அதன்பின் ஒரு நாள் திடீரென அதிகாலையில் தொலைபேசியில் பேசிய அவர், மக்கள் நலக் கூட்டணிக்குச் செல்வதாகக் கூறினார். விவேகம் இல்லாமல் நிதானம் இழந்து முடிவெடுத்ததாகத் தெரிந்தது.
 அதிமுக தலைமையுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகளை மேற்கொண்டேன். அப்போது, கட்சியில் இணைந்து கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டது. இதையேற்று கட்சியில் இணைந்துள்ளேன்.
 கே: அதிமுகவுடன் அணி சேரவில்லை என்பதற்காக தமாகாவில் இருந்து பெரும் எண்ணிக்கையில் யாரும் பிரிந்து வரவில்லையே?
 ப: நான் இணையும் போது யாரையும் அழைக்கவில்லை. இப்போதைய யதார்த்த சூழலைக் கருதி அதிமுகவில் இணைய தமாகாவினர் முடிவெடுத்து வந்தால் நான் அவர்களை வரவேற்பேன்.
 கே: அதிமுகவில் ஏதாவது பொறுப்புகளை எதிர்பார்க்கிறீர்களா?
 ப: எந்தப் பொறுப்பையும் எதிர்ப்பார்க்கவில்லை.
 கே: அதிமுகவில் இணைந்ததன் நோக்கம்?
 ப: தமிழகத்தில் நல்லாட்சி ஏற்பட வேண்டும். வாரிசுகளைக் கொண்டாடாத, குடும்ப ஆதிக்கம் இல்லாத கட்சியின் ஆட்சி அமைய வேண்டும். இதற்காகவே அதிமுகவில் இணைந்தேன். கடந்த திமுக ஆட்சியில் மின்சார வெட்டும், ரௌடித்தனமும் அதிகமாக இருந்தது. இப்போது மின்வெட்டு இல்லாமல் நல்லாட்சி உள்ளது. அது தொடர வேண்டும். என்று எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறினார்.