விபத்துகள், நீரில் மூழ்கி உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்; முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

விபத்துகள், நீரில் மூழ்கி உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்; முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

ஞாயிறு, நவம்பர் 29,2015,

சென்னை,

விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கி உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர், திருநெல்வேலி

விருதுநகர் மாவட்டம், வி.முத்துலிங்காபுரம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் குருசாமி என்பவரின் மகன் தங்கப்பாண்டி மற்றும் பழனிச்சாமி என்பவரின் மகன் பெத்துராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், அடங்கார்குளம் கிராம உதவியாளர் அருள்லிங்கம் மற்றும் செட்டிக்குளம் கிராம உதவியாளர் வேலு ஆகிய இருவரும் கூடங்குளம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

திண்டுக்கல், நாகப்பட்டினம்

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி கிருஷ்ணவேணி பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற வந்த போது மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி நகரத்தில், பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழாவிற்காகப் போடப்பட்டிருந்த மேடை மழையின் காரணமாக சரிந்து விழுந்ததில் தரங்கம்பாடி வட்டம், பரசலூர் கிராமத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி உயிரிழந்தார்.

கன்னியாகுமரி, தூத்துக்குடி

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், மேல்மிடாலம் கிராமத்தைச் சேர்ந்த தனிஸ்லாஸ் என்பவரின் மகன் பெர்க்மான்ஸ் விசைப்படகின் ஆங்கரை இழுத்து தூக்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், சிலுவைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிமுத்து என்பவரின் மகன் செல்வராஜ் திருச்செந்தூர் வட்டம், புன்னக்காயல் கடற்கரை பகுதியில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

கடலூர், திருவண்ணாமலை

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பொங்கியம் கிராமத்தை சேர்ந்த பிரதாப் என்பவரின் மகன் ஹரீஷ் மற்றும் ராமச்சந்திரன் என்பவரின் மகன் நந்தீஷ் ஆகிய இருவரும் திட்டக்குடி எல்லைக்கருகே பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிகாடு கிராமம் அருகே வெள்ளாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், பெருங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னபையன் என்பவரின் மகன் ஏழுமலை ஆந்திர மாநிலம், சென்னா நதியை கடக்க முற்பட்ட போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தலா ரூ.1 லட்சம்

இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 1 லட்சம் ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்என்று கூறியுள்ளார்.