விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் கனிமொழி: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சாடல்

விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் கனிமொழி: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சாடல்

செவ்வாய், பெப்ரவரி 23,2016,

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஓதுக்கீட்டை கட்டாயமாக்கிட கொண்டுவரப்பட்ட சட்டத்தை உலகப் பெண்ணினமே உவந்து பாராட்டுவதை பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க. எம்.பி. கனிமொழி விரக்தியின் விளிம்பில் உள்ளார் என்று தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், நகராட்சி நிருவாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஓதுக்கீட்டை கட்டாயமாக்கிட தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட, வரலாற்று சிறப்புமிக்க சட்ட முன்முடிவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த புரட்சிகரமான சட்டத்தை உலகப் பெண்ணினமே உவந்து பாராட்டி மகிழ்வதையும் பொறுத்துக்கொள்ள முடியாத தி.மு.க. எம்.பி.யான கனிமொழி விரக்தியின் விளிம்புக்குச் சென்று தனது அரசியல் காழ்ப்புணர்ச்சியை வார்த்தையாக வடித்திருக்கிறார்.

“பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை 110வது விதி அறிவிப்பால் நிறைவேற்ற முடியாது” என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து, தனது அறிவிலித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார் கருணாநிதியின் மகளான கனிமொழி!

“ஊருக்கெல்லாம் பலன் சொல்லுமாம் பல்லி, கழனிப் பானைக்குள்ளே விழுமாம் துள்ளி!” என்ற கதையாக, மெத்தப் படித்த மேதாவி போல கருத்துச் சொல்ல விழைந்த கனிமொழி தனது பேட்டியின் தொடக்கத்திலேயே முற்றிலும்  தவறாக உளறிக் கொட்டியிருக்கின்றார்.

தமிழக முதல்வர், பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்து உள்ளதாகவும், அந்த அறிவிப்பும் வெற்று அறிவிப்பாகத் தான் தெரிகிறது என்றும் பிதற்றி இருக்கிறார் கனிமொழி.

உள்ளாட்சிப் பதவிகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை பெண்களுக்கு கட்டாயமாக்குவது என்பது, விதி 110ன் கீழ் முதல்வர் அறிவித்த அறிவிப்பு அல்ல என்பதையும், மக்களுக்கு நன்மை அளிக்கும் திட்டங்களை எப்படிச் செய்தால், அது தடையோ, தடங்கலோ இன்றி நிறைவேற்றப்படும், வெற்றிகரமாக முடிக்கப்படும் என்பதை நன்குணர்ந்த முதல்வரின் உத்தரவுப்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்டத் திருத்த சட்ட முன்வடிவாகும் என்பதையும் கனிமொழி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது என்பது, அரசியல் வரலாறு தெரியாத கனிமொழிக்கு வேண்டுமென்றால் புதிதாக இருக்கலாம். ஆனால், அம்மா அவர்களுக்கு இது புதிது அல்ல.

“பொறுப்பு வழங்கப்பட்டால், பெண்கள் தங்கள் தலையெழுத்தை மட்டும் அல்லாமல், மற்றவர்களின் தலையெழுத்தையும் மாற்ற முடியும்” என்ற திண்ணமான நம்பிக்கையுடன், நாட்டை வழி நடத்துவதில் பெண்களுக்கு உரிய பங்கு வழங்குவதில், நாட்டிலேயே முன்னோடித் தலைவராக திகழ்பவர் முதல்வர் ஜெயலலிதா.

எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகப் பொறுப்புகளில் மகளிருக்கு 33 சதவீத ஒதுக்கீடு தந்தவர் ஜெயலலிதா என்பதை கனிமொழிக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

அது மட்டுமல்ல, உள்ளாட்சிப் பதவிகளில் மகளிருக்கு என்று தனி ஒதுக்கீடு எதுவும் இல்லாதிருந்த நிலையில், அவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் சட்டம், முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், அதாவது, 1994 ஆண்டில், கொண்டுவரப்பட்டது என்பதை கனிமொழி அறிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றிய மன்றங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றில் உள்ள இடங்கள் மற்றும் பதவிகளின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் அதற்குக் காரணமே ஜெயலலிதாதான். என்று தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.