விருத்தாச்சலத்தில் பலியான கழக தொண்டர்கள் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் : தேர்தல் முடிந்த பிறகு நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு

விருத்தாச்சலத்தில் பலியான கழக தொண்டர்கள் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் : தேர்தல் முடிந்த பிறகு நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு

செவ்வாய், ஏப்ரல் 12,2016,

விருத்தாச்சலத்தில் பலியான கழக தொண்டர்கள் இருவர் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் முடிந்ததும் நிதி உதவி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தல் மே 16-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு கடந்த நேற்று (11-ம் தேதி) கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிதம்பரம் நகர 31-வது வார்டை சேர்ந்த கழக உடன்பிறப்பு எஸ்.கருணாகரன் என்பவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரத்தை சேர்ந்த எம்.ராதாகிருஷ்ணன் என்பவர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பும் வழியில் உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டும் மிகுந்த வேதனையுற்றேன்.

அன்பு சகோதரர்கள் கருணாகரன், ராதா கிருஷ்ணன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் மரணம் அடைந்தவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். தற்போது சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தேர்தல் முடிந்த பிறகு கழகத்தின் சார்பில் குடும்பநல நிதி உதவி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.