விலையில்லா பசுக்கள் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 2.6 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி:ஓ.பன்னீர்செல்வம் தகவல்

விலையில்லா பசுக்கள் திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 2.6 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி:ஓ.பன்னீர்செல்வம் தகவல்

புதன், பெப்ரவரி 17,2016,

விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கிய திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 2.6 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் இது தொடர்பாக அவர் கூறியது:
தமிழகத்தில் ரூ. 231.11 கோடியில் 60 ஆயிரம் பயனாளிகளுக்கு 60 ஆயிரம் விலையில்லா கறவைப் பசுக்களையும், ரூ.927.75 கோடியில் ஏழு லட்சம் பெண்களுக்கு 28 லட்சம் வெள்ளாடுகள், செம்மறியாடுகளும் வழங்கப்பட்டுள்ளன.
அதன் பயனாக, 70,994 பசுங்கன்றுகளையும், 42.95 லட்சம் ஆட்டுக் குட்டிகளையும் கூடுதல் சொத்தாக பயனாளிகள் பெற்றுள்ளனர். மேலும் நாள் ஒன்றுக்கு 2.6 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியையும் பெருக்கியுள்ளது. கால்நடை மருத்துவத் துறையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 2011-2012-ஆம் ஆண்டிலிருந்து ரூ.422.37 கோடி செலவில் 200 புதிய துணை மையங்கள், 20 புதிய கால்நடை மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 810 துணை மையங்கள் கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கால்நடை பராமரிப்புத் துறைக்காக ரூ.1,188.88 கோடி, பால்வளத் துறைக்காக ரூ.119.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.