விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ரூ.1000 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ரூ.1000 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஆகஸ்ட் 10 , 2017 ,வியாழக்கிழமை,

விழுப்புரம் : விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு ரூ.1000 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் கடல் நீரை நன்னீராக்கும் புதிய திட்டம் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களிலுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் வழியோர ஊரகக் குடியிருப்புகளுக்காக நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகக் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு, ஏற்கனவே கொள்ளிடம் ஆற்றை நீர் ஆதாரமாகக் கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டத்தில், தற்போது 140 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சியால் நீர் ஆதாரம் குறைந்து விட்டதால், விழுப்புரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்றும் வகையில், நிரந்தர தீர்வு காணும் பொருட்டு, மாற்று ஏற்பாடாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆசியுடன், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணத்திலிருந்து விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி நகராட்சிகள், உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, சங்கராபுரம் பேரூராட்சிகள் மற்றும் உளுந்தூர்பேட்டை, கணை, விக்கிரவாண்டி, திருநாவலூர், மரக்காணம், வானூர் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில், நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் 1000 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தத் திட்டத்தினால் அந்த பகுதியில் இருக்கின்ற மக்களுக்கு நிலையான குடிநீர் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, மற்றொரு அறிவிப்பு. விழுப்புரம் நகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு 198 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் விழுப்புரம் நகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதிக்கான பாதாள சாக்கடைத் திட்டம் 198 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். விழுப்புரம் நகராட்சியில் ஏற்கனவே பாதாள சாக்கடைத் திட்டம், நகரின்மையப் பகுதியில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஜெயலலிதா ஆசியுடன் விழுப்புரம் நகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதியான பாணாம்பட்டு, சலமேடு, வழுவடத்தி, எருமணந்தங்கள், காரகுப்பம் ஆகிய பகுதிகளுக்கு ஆசியவளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 198 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்தநேரத்திலே தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நினைவு கொள்ளும் வகையில் இந்த மாவட்டத்தில் புதிதாக துவக்கப்பட்டுள்ள மகளிர் கலைமற்றும் கல்லூரிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி” என பெயர் சூட்டப்படும். மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கம் “டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கம்” என அழைக்கப்படும். மேலும், நகரப்பகுதியில் அமைந்துள்ள இரயில்வே கேட்டால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு விழுப்புரம் – வெங்கடேசபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையில், விழுப்புரம் நகரத்திற்கு செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலை எண் 45-ல் சாலை மேம்பாலம் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.