விவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப்செட்டுகள் வழங்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

விவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப்செட்டுகள் வழங்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூலை ,12 ,2017 ,புதன்கிழமை, 

சென்னை : 1000 விவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப்செட்டுகள் 90 சதவீத மானியத்ததில் வழங்கப்படும் என்று சட்டசபையில் நேற்று 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சட்டசபையில் நேற்று விதி 110ன் கீழ் முதல்வர்எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

தற்போது நிலவி வரும் வறட்சியினை கருத்தில் கொண்டு, குறைந்த நீரில் அதிக விளைச்சலும், விவசாயிகளுக்கு வருமானமும் தரும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியினை ஊக்குவிப்பதற்கு நடப்பாண்டில் 22 மாவட்டங்களில், தக்காளி, கத்தரி, வெண்டை போன்ற காய்கறி பயிர்களில் வீரிய ஒட்டு ரகங்கள் மற்றும் உயர் விளைச்சல் ரக சாகுபடி 11,250 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும்.இத்திட்டத்திற்காக 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம், சுமார் 2,250 விவசாயிகள் பயன்பெறுவர். இதற்காக, வீரிய ஒட்டு ரக விதைகள் மற்றும் குழித்தட்டுகளில் வளர்க்கப்பட்ட காய்கறி நாற்றுகள், 50 சதவீத மானியத்தில் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வரை வழங்கப்படும்.

தமிழக விவசாயிகளிடையே சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகளுக்கான தேவை அதிகம் இருப்பதால், தமிழ்நாடு அரசு, நடப்பாண்டில் இவ்வகை மோட்டார் பம்பு செட்டுகள் 1,000 விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

30 சதவீத மானியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் ரூ.15 கோடியும், மீதமுள்ள 60 சதவீத மானியம், வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்திட ரூ.29 கோடியே 94 லட்சம் நிதியும் ஒதுக்கப்படும்.

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.430 கோடி மதிப்பீட்டில், 10 ஆண்டு கால செயல்திட்டமாக உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் ஒன்று நிறுவப்படும். நடப்பாண்டில் இம்மையத்தின் ஆயத்தப் பணிகள் ரூ.51 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். நடப்பாண்டில் பண்ணை அளவில் 597 சிப்பம் கட்டும் அறைகள் அமைக்கப்படும். இதற்காக, சிப்பம் கட்டும் அறை ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வீதம் ரூ.11 கோடியே 94 லட்சம் ஒதுக்கப்படும். நடப்பாண்டில் 160 துணை வேளாண் விரிவாக்க மையங்கள் ரூ.48 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

திருச்சிராப்பள்ளியில் மகளிர் தோட்டக்கலை கல்லூரியும், குடுமியான்மலை, ஈச்சங்கோட்டை மற்றும் வாழவச்சனூர் ஆகிய இடங்களில் 3 வேளாண் கல்லூரிகள் உள்ளிட்ட பல்கலைக்கழக இதர மையங்களான, கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிள்ளிகுளம் வேளாண் கல்லூரிகள், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி, வம்பன் பயறு ஆராய்ச்சி நிலையம், கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம், உதகமண்டலம் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட பல்வேறு நிலையங்களில் மாணவர் பயில்திறன் சிறப்புற, நூலகம், கூடுதல் வகுப்பறைகள், ஆராய்ச்சிக் கூடங்கள், விடுதிகள், கலையரங்கம், மாணவர்களுக்கு துாய்மையான குடிநீர் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளும், விதை மையம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளும் நபார்டு வங்கியின் உதவியுடன் ஏற்படுத்தப்படும். இதற்காக, நடப்பாண்டில் ரூ.108 கோடி ஒதுக்கப்படும்.

நடப்பாண்டில் 430 வேளாண் உதவி அலுவலர் பணியிடங்கள் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.