விவசாயிகளை பாதிக்காத வகையில் மாற்றுப்பாதையில் கெயில் திட்டம்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

விவசாயிகளை பாதிக்காத வகையில் மாற்றுப்பாதையில் கெயில் திட்டம்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

திங்கள் , பெப்ரவரி 08,2016,

கெயில் நிறுவன திட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கூட்டநாடு – மங்களூரு, வழியாக பெங்களூருவுக்கு குழாய் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை கெயில் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

இந்த திட்டத்தை தற்போது திட்டமிட்டுள்ளபடி தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் உட்பட கொங்கு மண்டலத்தின் விளை நிலங்கள் வழியாக கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.

இதோடு, மா, பலா, தென்னந்தோப்புகள் அடங்கிய பகுதிகளிலும் இந்த குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமானால் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மரங்கள் வெட்டப்பட வேண்டியது இருக்கும்.

ஏதேனும் திட்டத்துக்காக ஒரு மரம் வெட்டப்பட்டால், வேறு பகுதியில் அதற்கு பதிலாக 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

அப்படியெனில், கெயில் நிறுவனம் சுமார் 12 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டியது இருக்கும். இதனை அந்நிறுவனம் செயல்படுத்துவது நடக்காத காரியம்.

விளை நிலங்களில் எரிவாயு குழாய்களை பதிக்கும் போது ஆந்திர மாநிலத்தில் நடந்தது போன்ற மிகப்பெரிய விபத்து நிகழவும் வாய்ப்பு உள்ளது.

மேலும், கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது போல தமிழகத்திலும் எரிவாயு குழாய்களை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைக்கலாம்.

இதன் மூலம் இந்த பிரச்னைக்கு சுமூகமானதொரு முடிவை எட்ட இயலும். இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு நிரந்தர தீர்வைக் காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.