வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் மற்றும் சிறு பாலங்களை தற்காலிகமாக சீரமைக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் மற்றும் சிறு பாலங்களை தற்காலிகமாக சீரமைக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், டிசம்பர் 15,2015,

தமிழகத்தில், கனமழை வெள்ளத்தால் சேதமடைந்த நெடுஞ்சாலைத்துறை சாலைகள் மற்றும் சிறு பாலங்களை தற்காலிகமாக சீரமைக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேதமடைந்த சாலைகள் மற்றும் சிறு பாலங்களை தற்காலிகமாக சீரமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டதுடன், இதற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டுள்ளார்.

சென்னை மாவட்டத்திற்கு 6 கோடி ரூபாயும், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களுக்கு தலா 12 கோடி ரூபாயும், இதர 8 மாவட்டங்களின் உடனடி சீரமைப்பு பணிகளுக்கு 8 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்காலிக சாலை சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்பட்டு, 30 நாட்களுக்குள் முடிக்கவும், திருவள்ளூர் மாவட்டத்தில் பழுதடைந்த 4 பெரிய பாலங்கள் அமைவிடத்தில் 45 நாட்களுக்குள் தற்காலிக சீரமைப்புப் பணிகளை முடிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் இரும்புலிச்சேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணி, 60 கான்கிரீட் குழாய்கள் மற்றும் ஆயிரத்து 500 மண் மூட்டைகள் கொண்டு சீரமைக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி – ஆவடி சாலையில் சேதமடைந்த செங்கல் வளைவு பாலத்திற்கு பதிலாக தற்காலிக குழாய் பாலம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதேபோன்று, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் இதுவரை 570 கிலோ மீட்டர் நீள சாலைகள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும், சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.