வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிணறுகள் மற்றும் கீழ் நிலை நீர்த் தொட்டிகளில் பொது சுகாதாரத்துறையின் மூலம் குளோரின் திரவம் மற்றும் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணி தொடங்கியது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிணறுகள் மற்றும் கீழ் நிலை நீர்த் தொட்டிகளில் பொது சுகாதாரத்துறையின் மூலம் குளோரின் திரவம் மற்றும் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணி தொடங்கியது

வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2015,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள கிணறுகள் மற்றும் கீழ் நிலை நீர்த் தொட்டிகளில் பொது சுகாதாரத்துறையின் மூலம் குளோரின் திரவம் மற்றும் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணி இன்று தொடங்கியது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க, முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க மக்கள் நல்வாழ்வுத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு மருத்துப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வீடு, வீடாகச் சென்று குளோரின் மாத்திரைகள், ப்ளீச்சிங் பவுடர் மற்றும் இளம் பெண்களுக்கு சானிடரி நேப்கின்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குடிநீரில் குளோரின் அளவைப் பரிசோதித்து பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் பணிகளையும் பொது சுகாதாரத்துறை செய்து வருகிறது. இதன்மூலம் தொற்றுநோய் பரவாமல் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள கிணறுகள் மற்றும் கீழ்நிலை நீர்த் தொட்டிகளில் குளோரின் திரவம் மற்றும் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளை மேற்கொள்ள 115 சுகாதாரக் குழுக்களும், இந்தக் குழுக்களைக் கண்காணிக்க 21 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் இந்த பணியை மேற்கொள்ளவிருக்கும் சுகாதாரக்குழுக்களுக்கு, சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையில் அமைச்சர் டாக்டர் C. விஜயபாஸ்கர் ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் கீதா லெட்சுமி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் திரு. கே. குழந்தை சாமி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.