வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மேலும் புதிய சலுகைகள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மேலும் புதிய சலுகைகள் : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், மார்ச் 02,2016,

மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மேலும் பல புதிய சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

கடந்த வடகிழக்கு பருவமழையின் போது ஒரு சில நாட்களில் பெய்த கன மழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகின.  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை எனது தலைமையிலான அரசு வழங்கியுள்ளது.

இந்த மழை வெள்ளத்தால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.  காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடு செய்துள்ள தொழில் நிறுவனங்கள் உரிய இழப்பீட்டுத் தொகையைப்  பெற்றிடவும், பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் தங்களுடைய தொழிலை மீண்டும் தொடங்கும் வகையில் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன்களுக்கான கடன் தவணையை ஒத்தி வைப்பதற்கும் மற்றும் மறு கடன் உதவி பெறுவதற்கும் எனது தலைமையிலான அரசு உதவி புரிந்துள்ளது. மேலும், வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 25 விழுக்காடு மானியத்துடன் கூடிய கடனுதவி 4,944 தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வடகிழக்கு பருவ மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு  மேலும் சில சலுகைகளை வழங்க நான் தற்போது உத்தரவிட்டுள்ளேன்.

இதன்படி, பெருமழையால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்ற கடனை வங்கிகள் மாற்றியமைத்துள்ளன. இந்த கடன்களுக்காக வங்கிகளுக்கு செலுத்தப்பட வேண்டிய வட்டியில் 3 விழுக்காடு வட்டி மானியம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இதன்படி,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகளால் மாற்றியமைக்கப்பட்டு வழங்கப்படும் கால கடன்களுக்கான வட்டியில் 3 விழுக்காடு வட்டியை  அரசே வழங்கும்.  இந்த வட்டி விழுக்காடு மானியம் ஒரு ஆண்டுக்கு  வழங்கப்படும். இதனால் அரசுக்கு 15 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து தாங்கள் ஏற்கெனவே பெற்ற வங்கிக் கடன்களை மாற்றியமைக்கப் பெற்றுள்ளதுடன், புதிய கடன்களையும் பெறுகின்றன. இந்த நிறுவனங்கள் கடனுக்கு என தங்கள்  சொத்துகளை பிணை வைப்பு செய்து அடமான பத்திரங்கள் பதிவு செய்கின்றன.  அவ்வாறான பத்திரப் பதிவுகளுக்கு முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.  பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கும் வகையில், இந்நிறுவனங்கள் செலுத்தும் முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டண செலவினங்கள் அந்த தொழில் நிறுவனங்களுக்கு திரும்ப வழங்கப்படும்.  இதன் காரணமாக  அரசுக்கு 5 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தொழிற்சாலைகளில் மழை நீர் புகுந்ததால் மின்சார மீட்டர்கள் பழுதடைந்து விட்டன. பழுதடைந்த உயர்மின் அழுத்த மீட்டர் ஒன்றுக்கு 26,000 ரூபாய் மற்றும் குறைந்த மின் அழுத்த மீட்டர் ஒன்றுக்கு 3,500 ரூபாய் என மின் வாரியத்திற்கு இந்நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை என்றும், இதற்கான செலவை மின் வாரியம் ஏற்கும் எனவும் நான் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன்.  அந்த அடிப்படையில், எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாமல் புதிய மின்சார மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மின்சார மீட்டர் பழுது காலங்களில் முந்தைய மாதங்களில் பயன்படுத்திய மின்சார அளவின் அடிப்படையில் மின் கட்டணத் தொகை வசூலிக்கப்படும் நடைமுறை உள்ளது. இந்த தொழில் நிறுவனங்களில் தேங்கியிருந்த நீரை அகற்றி சுத்தப்படுத்தும் வரை உற்பத்தி ஏதும் நடைபெறவில்லை.  எனவே, உற்பத்தி நடைபெறாத காலத்திற்கு மின் கட்டணம் எதுவும் வசூலிக்க வேண்டாம் என நான் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.

தற்போது நான் அறிவித்துள்ள இந்த சலுகைகள், வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.