வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், நிவாரணம், சீரமைப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில்,  நிவாரணம், சீரமைப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

திங்கள் , நவம்பர் 30,2015,

தமிழகத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், போர்க்கால அடிப்படையில் நிவாரணம், சீரமைப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், தமிழகம் முழுவதும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படுகிறது. நிதியுதவி மற்றும் அரிசி, வேட்டி-சேலை உள்ளிட்ட அனைத்து நிவாரணப் பொருட்களும் வழங்கப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், செஞ்சி, மரக்காணம், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, வானூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. திண்டிவனம், வானூர் ஆகிய வட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட 890 நபர்களுக்கு தலா 4 ஆயிரத்து 100 ரூபாய் நிதியுதவியும், வேட்டி-சேலை, 20 கிலோ அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட 38 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. ப. மோகன், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருச்சியில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களிலிருந்து மக்களை பாதுகாக்க, திருச்சி மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளி இலை மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அரசு தலைமைக்கொறடா திரு. ஆர்.மனோகரன், துணை மேயர், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்சி மாவட்டம் ஓமாந்தூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில் அமைச்சர் திரு. டி.பி. பூனாட்சி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட போந்தூர், எறையூர் மற்றும் பரணிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 724 பேருக்கு வீட்டு அத்தியாவசிய உபயோகப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் அமைச்சர் திரு. டி.கே.எம்.சின்னையா, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் பெரியாம்பட்டி அரசு மருத்துவமனைகளில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் திரு. P.பழனியப்பன், சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.