வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை

ஞாயிறு, டிசம்பர் 06,2015,

சென்னை,

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தட்டுப்பாடின்றி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

ஜெயலலிதா உத்தரவு

தமிழ்நாடு முதல்–அமைச்சர் ஜெயலலிதா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சிப் பகுதிகளுக்கு, தட்டுப்பாடின்றி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவுப்படி, நேற்று முன்தினம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சிப் பகுதிகளுக்கு தட்டுப்பாடின்றி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்க நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆகியோருடன் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செயல் இயக்குநர் மன்னூர், காவல்துறை கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் மற்றும் இதர பெட்ரோலிய நிறுவனத்தினர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

வினியோக முனையம்

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கையின்படி, தண்டையார்பேட்டை மற்றும் எண்ணூர் மொத்த வினியோக முனையங்களில் மழை வெள்ளம் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், கொருக்குப்பேட்டையிலுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் மொத்த வினியோக முனையங்கள் மற்றும் எண்ணூரிலுள்ள ‘இ.டி.டி.பி.எல்.’ மொத்த வினியோக முனையம் ஆகியவற்றிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் பெறப்பட்டு கூடுதலாக வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போர்க்கால நடவடிக்கை

மேலும், தமிழ்நாட்டின் இதர பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து 475 கிலோ லிட்டர் பெட்ரோலும், 857 கிலோ லிட்டர் டீசலும் சங்ககிரியிலிருந்து 22 டேங்கர் லாரிகள், திருச்சியிலிருந்து 25 டேங்கர் லாரிகள், பெங்களூரிலிருந்து 10 டேங்கர் லாரிகள், சித்தூரிலிருந்து 10 டேங்கர் லாரிகள் ஆக மொத்தம் 67 டேங்கர் லாரிகள் மூலமாக பெட்ரோல் மற்றும் டீசல் சென்னைக்கு போர்க்கால அடிப்படையில் வரவழைக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம், சென்னையில் 75 சதவீதம் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், சமையல் எரிவாயு சிலிண்டர்கள், சென்னை மாநகர மக்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எண்ணூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், மணலியில் உள்ள ‘பாட்டிலிங் பிளான்ட்’ ஆகிய நிறுவனங்கள் மூலமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வினியோகம் சீராகும்

இதில், எண்ணூர் மற்றும் மணலி பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், வினியோக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரத்திற்கு, செங்கல்பட்டிலிருந்து தினந்தோறும் 20 சரக்கு லாரிகள் மூலம் சமையல் எரிவாயு வினியோகிக்கப்பட்டு வந்த நிலையில், மழை வெள்ளத்தின் காரணமாக தற்போது தினந்தோறும் செங்கல்பட்டிலிருந்து கூடுதலாக 90 சரக்கு லாரிகள் மூலமாகவும் சேலத்திலிருந்து கூடுதலாக 40 சரக்கு லாரிகள் மூலமாகவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடின்றி வினியோகம் மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், தற்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எண்ணூரில் உள்ள பாட்டிலிங் பிளான்டில் உற்பத்தி தொடங்கியுள்ளதால் வினியோகம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.